தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது - ஜான்பாண்டியன் கருத்து

`ஸ்டெர்லைட்டுக்கு அடிக்கல் நாட்டியது அ.தி.மு.க ஆட்சி. அதனைத் திறந்து வைத்தது தி.மு.க ஆட்சி. பிறகு எப்படி இவர்கள் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பார்கள். லட்சக்கணக்கில் திரண்டு இந்த ஆலையை மக்களே பூட்டு போடுவோம்' என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

john pandian

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கடந்த 52 நாள்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மற்றும் கடந்த 3-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் பண்டாரம்பட்டி கிராம மக்களையும் நேரில் சந்தித்து தன் ஆதரவை தெரிவித்தார் ஜான்பாண்டியன். பின், ஊர் மக்களிடம் அவர் பேசுகையில், 'தூத்துக்குடியில் இந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 24 வருடங்களாக இயங்கி வருகிறது. இதன் துவக்கத்திலேயே மக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அப்போது மக்களிடம் ஒற்றுமை இல்லை. இதனால், தடையில்லாமல் ஆலையின் உற்பத்தி துவங்கி நடைபெற்று வந்தது. அதன்பிறகு, பல ஆண்டுகள் கழித்துப் போராட்டம் நடத்தப்பட்டபோது சாதி, மதம் ரீதியாக மக்களுக்குள் சிலர் பிரிவினையை ஏற்படுத்தினார்கள். இதனாலேயே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தோற்றுப் போயின. 

john pandian joints in kumarediyapuram  villagers

ஆனால், இந்த ஆலையால், இத்தனை வருடத்தின் முழுப்பாதிப்புகளையும் அனுபவித்த நீங்கள் தற்போது முழு ஒற்றுமையுடன்  குழந்தைகளுடன் அமர்ந்து காவல்துறையின் அடக்குமுறையையும் தாண்டி போராட்டத்தைக் கைவிடாமல் நடத்தி வருகிறீர்கள். உங்களது போராட்டத்தால்தான், கண்டப் பொதுக்கூட்டத்தில் மக்கள் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு எதிர்ப்பைக் காட்டினார்கள். கடந்த 50 நாளுக்கும் மேலான உங்களது போராட்டம்தான், அடுத்தடுத்த கிராமங்களையும் போராட்டக் களத்தில் குதிக்க வைத்துள்ளது.

பல மாநிலங்களில் விரட்டி அடிக்கப்பட்ட இந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை கையூட்டு வாங்கிக் கொண்டு தூத்துக்குடியில், செயல்பட ஒப்புதல் அளித்து அடிக்கல் நாட்டியது அப்போதைய அ.தி.மு.க அரசின் முதல்வர் மறைந்த ஜெயலலிதா. கையூட்டு வாங்கி விட்டு இந்த ஆலையை துவக்கி வைத்தது அப்போதைய தி.மு.க முதல்வர் கருணாநிதி. இந்நிலையில், இந்த ஆலையை மூடிட எப்படி தற்போதைய அரசு  நடவடிக்கை எடுக்கும். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தி.மு.க., சார்பில் நடத்தப்படும் போராட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல்தான். ஸ்டெர்லைட் பிரச்னையை திசை திருப்பவே அ.தி.மு.க.,வினரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேறியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே மக்களைப் பனயம் வைத்து பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள்.  நமது உயிரைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலைக்கு  லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு பூட்டு போட்டு போராட்டம் நடத்துவோம். நமது எதிரியை நாம்தான் ஒழிக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!