`முறையான அனுமதி வாங்கவில்லை' - தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலருக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் நோட்டீஸ்! | tamilnadu pollution control board sends notice to thoothukudi sipcot planning officer

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (04/04/2018)

கடைசி தொடர்பு:10:50 (04/04/2018)

`முறையான அனுமதி வாங்கவில்லை' - தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலருக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் நோட்டீஸ்!

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறி தூத்துக்குடி சிப்காட் – 2 திட்ட அலுவலருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய இசைவாணை இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறி தூத்துக்குடி சிப்காட் – 2 திட்ட அலுவலருக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது . 

தூத்துக்குடி சிப்காட்

தூத்துக்குடி மீளவட்டான் பகுதியில், அரசின் சிப்காட் இயங்கி வருகிறது. 654.42  ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்பூங்கா – 2, அமைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையாக இசைவாணை வாங்கவில்லை என, திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ்.பி., முத்துராமன் என்பவர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், சிப்காட் – 2 திட்ட அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், ``1988-ம் ஆண்டு திருத்தப்பட்ட, 1974 ம் ஆண்டு நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் இந்த விளக்கம் கேட்கப்படுகிறது. தங்களது நிறுவனமான சிப்காட் தொழிற்பூங்கா கட்டடம் 2, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உரிய இசைவாணையின்றி செயல்பட்டு வருகிறது. ஆகவே, தாங்கள் மேற்படி சட்டத்தின் 25-ம் பிரிவின் வரைமுறைகளை மீறியுள்ளீர்கள். எனவே, அந்தக் குற்றத்தை உங்களது நிறுவனம் புரிந்துள்ளது. அந்தச் செய்கையானது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் குற்றம் 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் கால அளவுக்குச் சிறைத்தண்டனையும் மற்றும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படத்தக்கதாகும்.

எனவே, தண்டிக்கப்படத்தக்க குற்றங்களுக்காக நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஏன் உங்கள் நிறுவனம் மீது குற்றவியல் வழக்குத் தொடரக் கூடாது என்பதற்கும் உங்கள் நிறுவனத்தை மூடுவதற்கும், மின்சாரம் வழங்குதல் மற்றும் நீர் வழங்குதலை நிறுத்தவும் ஏன் ஆணை பிறப்பிக்கக் கூடாது என்பதற்கும் 15 நாள்களுக்குள் உரிய விளக்கம் தெரிவிக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கடிதம், சென்னையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா மேலாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மீளவட்டான் பகுதியில் இயங்கி வரும் சிப்காட் வளாகத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலையும் இயங்கி வருகிறது. இப்போது, ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணியும், சிப்காட்டின் 2 கட்டட விரிவாக்கத்தில்தான் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் சிப்காட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸ், ஸ்டெர்லைட் விரிவாக்கத்தையும் பாதிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க