`ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்' - ஸ்டெர்லைட் ஆலை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு!

 

தங்கள் ஆலை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப்புகையால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஆலையை மூட வேண்டும் எனக் கூறி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 50 நாள்களைக் கடந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில்,  ஆலையின் சட்டப்பிரிவு பொதுமேலாளர் சத்யபிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

அதில், ``தூத்துக்குடியில் தாமிர ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்போது 2-வது யூனிட் அமைக்கும் வகையில் இதன் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
2-வது யூனிட்டும் துவக்கினால் இது இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி மையமாக திகழும். அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு ஏற்படும். இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தவறான தகவல்களை பரப்பியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆலைக்கு வாகனங்கள் சென்று வர முடியவில்லை. தொழிற்சாலை பணியாளர்களுக்கும், தொழிற்சாலை சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கபோவதாகவும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வருகின்றன. சிலர் தற்கொலைப்படையாக மாறி ஆலைக்கு சேதம் விளைப்பதாக கூட்டங்களில் பேசுகின்றனர். 

இந்த ஆலையால் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 3,500 பேர் பணியில் உள்ளனர். தொழிற்சாலை இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்தால் அது ஈடு செய்ய முடியாத இழப்பாக அமையும்,  எனவே, ஆலைக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம்.  இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த மனு இன்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!