`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் | Did Karthikeyan sign in Jaya's embalming? Sasikala again in trouble

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (04/04/2018)

கடைசி தொடர்பு:12:10 (04/04/2018)

`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. ' இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். 

`ஜெயலலிதா எம்பாமிங் படிவத்தில் கையொப்பமிட்டது கார்த்திகேயனா?' - சசிகலாவை நெருக்கும் ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன், 130 நாள்களைக் கடந்துவிட்டது. விசாரணை, குறுக்குவிசாரணை எனத் தீவிரமாக இயங்கினாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை. `இறுதி நாள்களில் என்ன நடந்தது என்ற முடிவுக்கு கமிஷன் வந்துவிட்டது. சசிகலாவுக்கு எதிரான விஷயங்கள் இதில் ஏராளம் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் ஆணைய வட்டாரத்தில். 

முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிவதற்காக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த நவம்பர் 22-ம் தேதியிலிருந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. `ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாணப் பத்திரமாகவோ அல்லது புகார் மனுவாகவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம்' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தி.மு.க பிரமுகர் டாக்டர்.சரவணன், ஜெ.தீபா, மாதவன், தீபக் உள்பட 70 பேர் நேரடியாகவும் தபால் மூலமாகவும் பிரமாணப் பத்திரத்தை அளித்தனர். சசிகலா உறவினர்களான மருத்துவர் சிவக்குமார், விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, கார்டன் உதவியாளர்கள் ராஜம்மாள், கார்த்திகேயன், கார் ஓட்டுநர் அய்யப்பன் ஆகியோருக்கு ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அப்போலோ நிர்வாகமும் அளித்தது. அதேநேரம், ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் சில பகுதிகள் வெளியாகின. இதனால் அதிர்ந்து போன விசாரணை ஆணையம், `சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்கள் 70 சதவிகிதம் உண்மையில்லை. வெளியான தகவல்கள் எதுவும் சசிகலா தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில் இல்லை. செப்டம்பர் 27-ம் தேதி காவிரி பற்றி ஜெயலலிதா, ஆலோசனை நடத்திய விவரமும் சசிகலா வாக்குமூலத்தில் இல்லை' எனத் தெரிவித்தது. 

ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நம்மிடம் விவரித்த ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவர், `` 130 நாள்களாக நடந்து வந்த விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. பல விஷயங்களை மூடி மறைக்கும் வேலைகள் நடந்துள்ளன. டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதய முடக்கம் வருவதற்கான காரணங்களையும் மருத்துவரீதியாக ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அன்று காலை 6.30 மணியளவில் ஜெயலலிதாவுக்கு காபி கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, வாய்வழியாக எந்த உணவுகளும் அவருக்கு வழங்கப்படவில்லை.

சசிகலாஅவருடைய ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்ததுதான் மரணத்துக்குக் காரணம் என்கிறார்கள். அதுகுறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டங்களில், அவருக்கு அளவுக்கு அதிகமான ஸ்டீராய்டுகள் (ஊக்க மருந்து) கொடுக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றி சரியான விளக்கத்தை மருத்துவர் சிவக்குமார் தெரிவிக்கவில்லை. முதல்வரின் உடல்நிலையைக் கண்காணிக்க ஐந்து அரசு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரையும் மருத்துவமனைக்குள் அப்போலோ நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அப்போலோவின் 27 சிசிடிவி கேமராக்களும் ஏன் அணைத்து வைக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என விவரித்தவர், 

`` ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் கிளினிக்கல் அட்டாப்சி செய்யப்படவில்லை. அவரது மரணத்துக்கான காரணங்களை மறைக்கும் வேலைகள் நடந்துவந்துள்ளன. அவர் இறந்த பிறகு, எம்பாமிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ரத்தச் சம்பந்தமுள்ள உறவினர்களின் கையொப்பம் அவசியம். இந்தக் கையொப்பத்தை யார் போட்டார்கள் எனப் பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சியது. கார்டனில் சசிகலாவுக்கு உதவியாளராக இருந்த கார்த்திகேயன்தான் இந்தக் கையொப்பத்தைப் போட்டிருக்கிறார். இந்தச் சட்டவிரோதக் காரியத்துக்கு அப்போலோ மருத்துவமனையும் துணைபோயுள்ளது.

கார்த்திகேயனின் பின்புலத்தையும் தீவிரமாக விசாரித்தோம். இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர். ஜெயலலிதாவின் உதவியாளராக பூங்குன்றனும் சசிகலாவின் உதவியாளராக கார்த்திகேயனும் இருந்துள்ளனர். இடையில் சசிகலாவோடு மனஸ்தாபம் ஏற்பட்டு, கார்டன் பணியிலிருந்து விலகிவிட்டார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரை சசிகலா அழைத்து வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். எம்பாமிங் நடவடிக்கையில் ஏராளமான சந்தேகங்கள் முளைத்துள்ளன. அவரது மரணத்துக்கான காரணத்தை யாரும் கண்டறிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே எம்பாமிங் பணிகள் நடந்துள்ளன. மருத்துவச் சிகிச்சையின் அனைத்து மர்மங்களும் விலகத் தொடங்கியிருக்கின்றன. விரைவில் அனைத்து உண்மைகளையும் அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறார் ஆறுமுகசாமி" என்றார் விரிவாக. 


டிரெண்டிங் @ விகடன்