வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (04/04/2018)

கடைசி தொடர்பு:11:26 (04/04/2018)

382 ஐம்பொன் சிலைகளின் உண்மை நிலை! - களத்தில் இறங்கியது வல்லுநர் குழு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் ஐம்பொன் சிலைகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிய 12 வல்லுநர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால், இங்கு மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.  

பந்தநல்லூர் ஐம்பொன் சிலை

பந்தநல்லூரைச் சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கோயில்களின் பழைமையான ஐம்பொன் சிலைகள் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயில் மற்றும் கீழமணக்குடி விஸ்வநாத சுவாமி கோயில்களுக்குச் சொந்தமான 6 சிலைகள் காணாமல் போயிருப்பது 2003-ம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுதொடர்பாக கோயில் ஊழியர்கள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். இங்கிருந்து வேறு சிலைகள் ஏதேனும் கடத்தப்பட்டுள்ளதா எனச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு தற்பொழுது 382 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஐம்பொன் சிலைகளின் உண்மை நிலையைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். தொல்லியல்துறையைச் சேர்ந்த 12 வல்லுநர்களைக் கொண்ட குழுவினர் இந்த ஆய்வைத் தற்பொழுது மேற் கொண்டுள்ளார்கள். இதன் மூலம், சிலை செய்யப்பட்ட காலம், ஐம்பொன்களின் அளவு உள்ளிட்டவை கண்டறியப்படும். இதற்கு நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் தொல்லியல்துறை, தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த 12 வல்லுநர்களுடன், தொழில்நுட்ப பணியாளர்கள் 20 பேரும் இந்தச் சோதனையில் இறங்கியுள்ளார்கள். இதனால், பந்தநல்லூரில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.