`40 ரூபாய் கொடுக்கிற... நீயே யோசி...!' - டிரைவரிடம் 100 ரூபாய்க்கு மல்லுக்கட்டிய டிராஃபிக் போலீஸ் | Traffic police demands money from Driver

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (04/04/2018)

கடைசி தொடர்பு:19:25 (05/04/2018)

`40 ரூபாய் கொடுக்கிற... நீயே யோசி...!' - டிரைவரிடம் 100 ரூபாய்க்கு மல்லுக்கட்டிய டிராஃபிக் போலீஸ்

போலீஸ்

'100 ரூபாய் கொடுத்தால்தான் வண்டி போகும்' என்று  லாரி டிரைவரிடம்  சென்னை  போக்குவரத்து உதவி ஆய்வாளர் பேரம் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  

சென்னை மாநகர காவல்துறையினருக்கு "கட்டம்'  சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காவலர் தொடர்புடைய வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி, பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட பெண் காவலர் மது அருந்தும் காட்சி, பாலவாக்கம் கடற்கரையில் கான்ஸ்டபிளை மிரட்டும் ஏ.டி.ஜி.பி.யின் மகள், தி.நகரில் மூன்று போக்குவரத்துக் காவலர்களும் சாலிகிராமம் வாலிபரும் என தொடர்ந்து தமிழக காவல்துறைக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகிவருகின்றன. அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைசொல்லவில்லை. ஒருசில காவலர்கள் செய்யும் தவறுகள், தமிழக  காவல்துறைக்கு அவமானத்தை தேடிக் கொடுத்துவிடுகிறது. தி.நகர் சம்பவம் தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவரும்வேளையில், பெரும்பாக்கம் அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் செய்யும் அடாவடி வசூல் வீடியோ அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த சோளிங்கநல்லூர் சுங்கச்சாவடி அருகே நடந்த சம்பவம் இது. சோளிங்கநல்லூரிலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில்  குடிநீர் கேன்களை ஏற்றி வந்த மினி லாரி  ஒன்றையும் அதற்கு முன்னால் டேங்கர் லாரி ஒன்றையும் நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் உதவி ஆய்வாளர் . அப்போது, டிரைவரிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பேரம் பேசும் வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது. அது, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் இருப்பது டேங்கர் லாரி டிரைவர் பெருமாளுடன் மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் என்று தெரியவந்தது.போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மினி லாரி டிரைவர் செல்கிறார். அடுத்து, டேங்கர் லாரி, டிரைவர் பெருமாள் கொடுத்த 40 ரூபாய் போதாது என்று அடாவடி செய்கிறார் உதவி ஆய்வாளர் பாஸ்கரன்.  

 

 


'இது எவ்வளவு பார்த்தீயா..'. என்று ரூபாய் நோட்டுகளைப் பெருமாளிடம் காட்டுகிறார் உதவி ஆய்வாளர் பாஸ்கரன். அதற்குப் பெருமாள், 'இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் வித்தியாசம் இல்லையா' என்கிறார். 'இது எவ்வளவு என்று பார்த்தீயா' என்று மீண்டும் ரூபாய் நோட்டுகளைக் காண்பிக்கிறார் உதவி ஆய்வாளர். 'நாற்பது ரூபாய் கொடுத்திருக்கிற... நான் உன்கிட்ட கேட்கல...நீயே யோசி,  இது தமிழ்நாடுதானே புரியுதா.. நான்  வெளிநாட்டிலிருந்து வரல...  பாகிஸ்தானிலிருந்தும் நான் வரல... நீ காஷ்மீரிலிருந்தும் வரல' என்கிறார் உதவி ஆய்வாளர். 

அதற்குப் பெருமாள் '10 ரூபாய்தானே சார்..என்று உதவி ஆய்வாளரிடம் கெஞ்சுகிறார்.  'நீ  11 மணி வரை பேசிகிட்டே இரு, 100 ரூபாய் கொடுத்ததால் தான் உன் வண்டி போகும். நானும் மேடவாக்கம் நீயும் மேடவாக்கம். தமிழ்ல தான் சொல்றேன்  எவனை வேண்டுமென்றாலும் கேளு... பாஸ்கரன்னா யாருன்னு' என்று சொல்கிறார் உதவி ஆய்வாளர். 

இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பெருமாளிடம் இன்னொருவர் பத்து ரூபாயைக் கொடுக்கிறார். அதைப் பெருமாள், உதவி ஆய்வாளரிடம் கொடுக்க முயற்சி செய்கிறார். அப்போது, உதவி ஆய்வாளர்,  'அதை நீயே வைத்துக்கொள்' என்று சொல்லியபடி அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது  'உன்னால ஒரு வண்டியை விட்டுவிட்டேன்' என்ற கவலையுடன் கிளம்புகிறார் உதவி ஆய்வாளர். 
 
 இந்த வீடியோவையடுத்து சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.