ராஜகண்ணப்பன் செயலால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க தொண்டர்கள்!

ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க உண்ணாவிரத போராட்டத்தின்போது காவிரி பிரச்னை பற்றி பேசாமல் கட்சி பிரச்னை பற்றி பேசிய ராஜகண்ணப்பனின் செயலால் கட்சிக்காரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ராமநாதபுரத்தில் நடந்த அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தின்போது காவிரி பிரச்னை பற்றி பேசாமல் கட்சிப் பிரச்னை பற்றி பேசிய ராஜகண்ணப்பன் செயலால் கட்சிக்காரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ராமநாதபுரம் உண்ணாவிரதத்தில் ராஜகண்ணப்பன் பேச்சு

ராமநாதபுரத்தில் நேற்று அ.தி.மு.க-வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலாளரான ராஜ கண்ணப்பன் தலைமை வகித்தார். அமைச்சர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைக்க மைக் பிடித்த ராஜகண்ணப்பன், ''அ.தி.மு.க தொண்டர்கள் கட்சி, கொடி, சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் இருப்பார்கள். தினகரனுக்குப் பின்னால் போனவர்கள் எல்லாம் இங்கே இருந்துகொண்டு குழப்பம் விளைவித்தபடி இருந்தவர்கள்தான். கட்சியைவிட்டு பதவிக்காக ஓடியவர்கள். கட்சியில் இருந்த சமூக விரோதிகள் கட்சியைவிட்டுப் போனதால் கட்சிக்கு நிம்மதி. தினகரனால் மேலூரில் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். எங்களைப்போல் ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்த முடியாது. அந்தளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லை. தி.மு.க-வை இயக்குபவர்களும் அ.தி.மு.க-காரர்கள்தான். இங்கிருந்து சென்ற செல்வகணபதி, முத்துச்சாமி, சேகர்பாபு, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், தென்னவன் போன்றவர்கள்தான் தி.மு.க-விலும் இருக்கிறார்கள்.

தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. இதில் பெரிய பதவி ஏதும் இல்லை என்றபோதிலும் அதைப் பெறுவதற்கு கட்சிக்குள் போட்டி நிலவுகிறது. அடுத்து உள்ளாட்சித்தேர்தல் வர உள்ளது. எனவே, இப்போது பதவியில் உள்ளவர்களுக்கெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. நாங்கள்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான சான்றுகளைக் கொண்டு வருவோம். எனவே, இப்போ பதவி வாங்கிட்டு நாளைக்கு வேறு பதவி கேட்டால் கொடுக்கப்பட மாட்டாது. எனவே, ஒற்றுமையாக இருந்து கூட்டுறவுத் தேர்தலில் வெற்றி பெறுங்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுங்கள்'' எனப் பேசிவிட்டு கடைசியாகப் பெயரளவுக்கு காவிரி நீர் குறித்து சில நிமிடங்கள் மட்டும் பேசி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் காவிரி குறித்து விரிவாகப் பேசாமல், கட்சிப் பொதுக்கூட்டம்போல் உட்கட்சி மோதலையே திருப்பித் திருப்பி பேசியது அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் எரிச்சலடையச் செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!