யுவன் ஷங்கர் ராஜா ஆடி கார் வழக்கில் நடந்த ருசிகரம்!

யுவன்சங்கர்ராஜா

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆடி கார் மாயமாகியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை, எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜராஜன். இவர், எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் டிரைவர் நவாஸ்கான் சாதிக், ஆடி காருடன்  தலைமறைவாகிவிட்டார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் எழும்பூர் போலீஸார், நவாஸ்கான் சாதிக்கையும் ஆடி காரையும் வலைவீசி தேடினர். இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மதுரைக்குச் சென்றிருந்த சமயத்தில் அவரது ஆடி கார், மாயமாகிவிட்டதாக எங்களுக்குப் புகார் வந்தது. அதன்பேரில் டிரைவர் நவாஸ்கான் சாதிக்கை அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். அப்போது செல்போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால், செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி செய்தோம். அப்போது, அவரது செல்போன் சிக்னல் கடைசியாக எழும்பூரில் உள்ள டவர் ஒன்றைக் காட்டியது. இதனால், எழும்பூரில்தான் நவாஸ்கான் சாதிக் இருக்கலாம் என்று சந்தேகித்தோம்.

தொடர்ந்து, புகார் கொடுத்த ராஜராஜன், யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரித்தோம். அப்போது, காரை எங்கு நிறுத்துவீர்கள் என்று கேட்டோம். அதற்கு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஓர் இடத்தை அவர்கள் காட்டினர்.  அங்கு கார் இல்லை. தொடர்ந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேறு கார் பார்க்கிங் உள்ளதா என்று கேட்டோம். அப்போது, கீழ்தளத்தில் இன்னொரு பார்க்கிங் இருப்பதாகத் தெரிவித்தனர். உடனே நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அப்போது, ஆடி கார் அங்கு நின்றது.

இதுகுறித்து யுவன் ஷங்கர் ராஜா மற்றும் புகார் கொடுத்த ராஜராஜனிடம் கேட்டபோது அவர்களால் பதிலளிக்க முடியாமல் திகைத்துப்போய் நின்றனர். அடுத்து டிரைவர் எங்கே என்று தேடினோம். காரை விட்டு சில தூரத்தில் டிரைவர் நவாஸ்கான் சாதிக் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி விசாரித்தோம். எங்களைப் பார்த்ததும் அவர் என்ன சார் பிரச்னை என்று அப்பாவியாகக் கேட்டார். அவரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தோம். அதற்கு, 'வழக்கமாகக் கார் நிறுத்துமிடத்தில் இடமில்லை. இதனால் இங்கு காரை நிறுத்தினேன். சார்ஜர் இல்லாததால் செல்போனும் ஸ்விட்ச் ஆப்பாகி இருக்கிறது. அதையும் நான் கவனிக்கவில்லை' என்று டிரைவர் பதிலளித்தார். அதன் பிறகு கார் வழக்கை முடித்து வைத்தோம்" என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!