`மத்திய அரசின் எடுபிடிபோல் மாநில அரசு செயல்படுகிறது!' - கமல் குற்றச்சாட்டு

கமல்
 
"மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டிய மாநில அரசு, எடுபிடி போன்று செயல்படுகிறது" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

திருச்சியில் இன்று நடைபெறவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள கமல் 11 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்த தீர்ப்பைப்போல் இப்போது சில காரணங்களைச் சொல்லி தாமதிக்கப்படுகிறது. அதை ஏற்க முடியாது. மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டிய மாநில அரசு, எடுபிடி போன்று செயல்படுகிறது. இன்று மாலை நடக்கும் எங்கள் முதல் பொதுக்கூட்டம் காவிரி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும். அதோடு இந்தப் பிரச்னைக்கான தீர்வை ஆய்வின்படி கோட்பாடுகள் அறிவிக்கப்படும். மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள் ஐந்து மாதத்தில் முழுமை அடையும். மிக முக்கியமான விஷயங்கள் குறித்து மாலை பொதுக்கூட்டத்தில்  பேச உள்ளேன்'' என்றார்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீர்ப்பு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்குப் பதிலளித்த கமல், இதுகுறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன். அதில் மாற்றம் கொண்டுவர தேவையில்லை'' என்று கூறினார்.

உங்கள் ரயில் பயணத்தில் மக்களுக்கு இடையூறாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததே என்ற கேள்விக்கு, கூடுமானவரை மக்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காக சில விஷயங்களைத் தவிர்த்தோம் என்றார் கமல்.

காவிரிக்காக ஆளுங்கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்த கேள்விக்கு, ''உண்ணாவிரதம் இருப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்றார்.

மாலை திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காவிரி, ஸ்டெர்லைட் விவகாரங்கள் குறித்து கட்சியின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!