`ஐ.பி.எல் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும்!' - உயர் நீதிமன்றத்தில் மனு #IPL

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்குத் தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த ஆண்டு மீண்டும் களத்தில் இறங்க உள்ளன. மற்ற அணிகளுக்குப் புதிய கேப்டன்களாக ரவிசந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளது இந்தத் தொடரில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் ஆயத்தமாகிவிட்டனர். ஐ.பி.எல் போட்டி இப்போதே களைகட்டத் தொங்கிவிட்டது.

ஐ.பி.எல் போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், தற்போது இந்தப் போட்டியைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்யாமல் ஐ.பி.எல் போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் அணிகள்மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக பி.சி.சி.ஐ மற்றும் மத்திய அரசு வரும் 13-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!