காஞ்சிபுரம் கச்சியப்பர் சிலை காணாமல்போன வழக்கில் அர்ச்சகர் கைது!

காஞ்சிபுரத்தில் காணாமல்போன கச்சியப்பர் சிலை திருட்டு தொடர்பாக அர்ச்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் குமரக் கோட்டம் முருகர் கோயிலில் உள்ள கச்சியப்பர் வெண்கல சிலை திருட்டு தொடர்பாகக் கோயில் அர்ச்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை சிலை மீட்கப்படாததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் கச்சியப்பர் சிலை

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் மிகவும் பழைமை வாய்ந்தவை. பல்லவர்கள், சோழர்கள் எனப் பல மன்னர்களால் கட்டப்பட்ட உலகப் புகழ்மிக்க கோயில்கள் காஞ்சிபுரம் முழுவதும் நிறைந்துள்ளன. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை செய்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பான சர்ச்சை காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எனப்படும் காஞ்சி குமரக்கோட்டம் கோயிலில் கச்சியப்பர் சிலை காணாமல்போன சம்பவம் காஞ்சிபுரம் பக்தர்களை மேலும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. குமரக்கோட்டம் முருகர் கோயிலில் கச்சியப்பர் என்பவர் கந்தபுராணத்தை இயற்றினார். இத்திருக்கோயில் உள்ள 13 சந்நிதிகளில் மொத்தம் 53 வகையான சாமி சிலைகள் உள்ளது.

இந்தக் அர்ச்சகர் கார்த்திக்கோயிலில் உள்ள கச்சியப்பருக்கு 7.47 கிலோ கிராம் எடை கொண்ட வெண்கல சிலை ஒன்று உள்ளது. வருடத்துக்கு ஒருமுறை இந்தச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் உலாவருவது வழக்கம். அதன்படி கடந்த மார்ச் முதல் வாரத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு, கச்சியப்பர் சிலை உற்சவ சிலைகளுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 10-ம் தேதி காணாமல் போனதாகக் கோயில் குருக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சிலையைத் தேடும் பணி நடைபெற்றது. ஆனால், கடைசி வரை சிலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிலை திருட்டு குறித்து புகார் அளித்தார். காவல்துறையின் தீவிர விசாரணையில் கோயில் அர்ச்சகர் கார்த்திக்மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் விசாரணை தொடர்ந்ததில் கோயில் அருகில் உள்ள சர்வதீர்த்த குளத்தில் மதுபோதையில் வீசியதாகக் கூறினார். அதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குளத்தில் தீயணைப்புத்துறை உதவியுடன் 6 மணி நேரம் தேடினார்கள். அப்போதும் சிலை கிடைக்கவில்லை. அவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

காஞ்சிபுரத்தில் சிலைகள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்வதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!