பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்கணும்; சிலை முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க எதிர்ப்பு

பழநி சிலை முறைகேடு வழக்கு

பொன்.மாணிக்கவேல்தான் விசாரிக்கணும்; சிலை முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க எதிர்ப்பு

சிலை செய்ததில் நடந்த முறைகேடு வழக்கில் நீதி கிடைக்க மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்தான் விசாரணை செய்ய வேண்டும் என்று பழநி பக்தர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

பழநி  

பழநி முருகன் கோயிலுக்கு 2004-ம் ஆண்டு ஐம்பொன் சிலை செய்ததில் தங்கம் மோசடி செய்ததாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தலைமை ஸ்தபதி முத்தையா மற்றும் 2004-ம் ஆண்டு கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா என்பவரைக் கைது செய்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், பழநியில் மூன்று நாள் முகாமிட்டு, சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரித்தார். கோயில் ஆவணங்கள், தற்போதைய இணை ஆணையர் உள்ளிட்ட பலரையும் விசாரணை செய்தார். சிலை செய்ததில் முறைகேடு செய்தவர்களைச் சட்டத்தின் முன்பாக நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் வரை ஓயமாட்டேன் என விசாரணையைத் தீவிரமாக நடத்தி வந்தார். அவரது விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. கோயிலில் பக்தர்கள் கொடுத்த தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு முறையான கணக்கு இல்லாமல் இருப்பதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்திருக்கிறார். 2004-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய சிலை செய்தபோது நடந்த முறைகேட்டில் பல வி.வி.ஐ.பி-கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. 

பழநி சிலை முறைகேடு 

சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை சரியான திசையில் வேகமாகச் சென்றுகொண்டு இருந்தது. பழநியில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பக்தர் பேரவையினர் பொன்.மாணிக்கவேல் விசாரணையின்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், விசாரணை சூடுபிடித்து வரும் நேரத்தில், வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய பழநி பாலதண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார், ‘‘இந்த வழக்கு மோசடி, ஏமாற்று வழக்கு என்பதால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்யத் தேவையில்லை எனச் சொல்லி வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருக்கிறார்கள். பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடந்த விசாரணையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மேலும், இதில் கைது செய்யப்பட்டுள்ள கே.கே.ராஜா, அமைச்சர் ஒருவரின் உறவினர் எனச் சொல்லப்படுகிறது. ராஜா உள்ளிட்ட அதிகாரிகளைக் காப்பற்றவும் இதில் உள்ள பல்வேறு ரகசியங்கள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவும் வழக்கை இருட்டடிப்பு செய்வதற்காகவும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருக்கிறார்கள். இது யாரையோ காப்பாற்ற செய்யும் சதி.

ஆடிட்டர் ரமேஷ், கோவை சசி ஆகியோர் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், இன்று வரை வழக்கு நிலுவையில் தானே இருக்கிறது. ஐம்பொன் சிலை செய்தபோது நடந்த முறைகேட்டில் நவபாஷண சிலையைக் கடத்தும் முயற்சியும் நடந்திருக்கிறது. அதை மறைப்பதற்காகவே வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதி கிடைக்க, மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-தான் விசாரணை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்து அமைப்புகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!