``தி.நகரில் அந்த இளைஞனிடம் அவ்வளவு ஆக்ரோஷமாக நடந்திருக்க வேண்டாம்!’’ -  ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி | we can't do anything when someone says bad about wife -facebook status of a police officer

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (04/04/2018)

கடைசி தொடர்பு:15:51 (04/04/2018)

``தி.நகரில் அந்த இளைஞனிடம் அவ்வளவு ஆக்ரோஷமாக நடந்திருக்க வேண்டாம்!’’ -  ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

முன்னாள் ஏ.டி.எஸ்.பி சம்ப்ரிய குமாரின் ஃபேஸ்புக் பதிவு அதிர வைத்துள்ளது.

``தி.நகரில் அந்த இளைஞனிடம் அவ்வளவு ஆக்ரோஷமாக நடந்திருக்க வேண்டாம்!’’ -  ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

மிழகக் காவல்துறை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் மக்கள். காரணம், பொதுமக்களிடம் போலீஸார் நடந்துகொள்ளும் விதம். சென்னை தி.நகரில்  இளைஞர் ஒருவரை டிராஃபிக் போலீஸார் கட்டிவைத்து அடிப்பதும், அவரின் தாயார் கதறுவதுமான காட்சிகள், பார்ப்பவர் மனதை பதைபதைக்கவைத்தன. `போலீஸ்  என்கிற அதிகார ஆணவத்தில் இவ்வாறு நடந்துகொள்கிறார்களா அல்லது அவர்களின் இதயம் இரும்பாகிவிட்டதா?' என்ற கேள்விகள், பொதுமக்களிடம் மட்டுமல்ல மற்ற காவல் துறையினரிடமும் விவாதிக்கப்படுகிறது.

``போலீஸார் தற்கொலை செய்துகொள்வதும், தீக்குளிக்க முயலும் சம்பவங்களும்கூட தற்போது அதிகரித்துள்ளன. போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை கனிவுடன் நடத்தினால், உளவியல்ரீதியாகத் துன்புறுத்தாமல் இருந்தால் இத்தகைய சம்பவங்கள் குறைய வாய்ப்பு உண்டு'' என்கிறார் செங்கல்பட்டு சிறைச்சாலையில் கூடுதல் துணைக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சம்ப்ரியா குமார்.

கடந்த மார்ச் 31-ம் தேதியன்று  காவல்துறை பணியிலிருந்து ஓய்வுபெற்றார் சம்ப்ரியா குமார். ஓய்வுபெற்ற அடுத்த நாளே போலீஸ் அதிகாரியாக தன் அனுபவம் குறித்து ஃபேஸ்புக்கில் அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். உருக்கமான அந்தப் பதிவு, போலீஸ் வட்டாரத்தை மட்டுமல்ல பொதுமக்களையும் கலங்கடித்தது.

போலீஸ் அதிகாரி சம்ப்ரியா குமார்

`ஒருநாள், அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன்.  அப்போது காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்தார். `என் மனைவிக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. ஊருக்குச் சென்று மனைவியைப் பார்க்க விடுமுறை  வேண்டும் என்று  இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன். அவரோ என்னையும் என் மனைவியையும் மிகவும் கேவலமாகப் பேசிவிட்டார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிக மிக அசிங்கமான வார்த்தைகள். நான் மிகவும் காயப்பட்டுவிட்டேன். கடைசியாக தங்களிடம் சொல்லிவிட்டு வேலையைவிட்டுப் போகலாம் எனத் தோன்றியது' என்றார்.  காவலரின் நொறுங்கிப்போன இதயத்தின் வலி நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட நான், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை அழைத்து உடனடியாக அந்தக் காவலருக்கு விடுமுறை அளிக்கச் சொன்னேன். பணியை  ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த காவலருக்கு அறிவுரைகள் கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

அந்தத் தருணத்தில் இளம் அதிகாரியாக இருந்தபோது எனக்கு நேர்ந்த மிகக் கொடுமையான வேதனைகளை நினைத்துப்பார்க்க என் மனம் தூண்டியது. என் திருமணத்துக்கு, என் உயர் அதிகாரி மூன்று நாள்கள் மட்டுமே விடுமுறை கொடுத்தார். நான்காவது  நாள் பணிக்கு வந்தபோது, செங்கல்பட்டு சிறைச்சாலை பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டேன். அப்போது, ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் அத்தனை பேரும் செங்கல்பட்டு சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர். விடுமுறையோ,  ஓய்வு அனுமதியோ எதுவுமே வழங்கப்படவில்லை. இதனால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதுமணப்பெண்ணான என் மனைவி, தன் சகோதரருடன் என்னைப் பார்க்க செங்கல்பட்டுக்கு வருவார். என் மனைவியை செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நிற்க வைத்துவிட்டு, அவரின் சகோதரர் சிறைச்சாலைக்கு வந்து காவலரிடம் என்னைப் பார்க்க அனுமதி கேட்பார்.

ஒருநாள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அந்தக் காவலர் விவரத்தைச் சொன்னதும், மிகவும் சத்தமாக அங்கே இருக்கும் மற்றோர் அதிகாரியிடம்,  `யோவ்... அந்த சம்ப்ரிய குமார்  பையனைப் பார்க்க ஏதோ ஒரு பொண்ணு செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட்ல நிக்குதாம். கண்ட கண்ட பெண்களோட கேடுகெட்டப் பழக்கம் உள்ள நாய்களெல்லாம் அதிகாரியாக வந்து நம்ம மானத்தை வாங்குறாங்க. வெரட்டிவிடுய்யா அந்த நாயை' என்றார்.

போலீஸ் அதிகாரி சம்ப்ரியா குமார்

அப்படியே நொறுங்கிப்போய்விட்டேன். வெளியே காத்து நிற்கும் எனது மைத்துனரிடம் `தயவுசெய்து போய்விடுங்கள். எனக்குப் பார்க்க இஷ்டமில்லை' என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தன்னைக் காண கணவர் வருவார் எனக் காத்திருக்கும் என் மனைவியிடம் ஏதேதோ சமாதானம் சொல்லி என் மைத்துனர் ஊருக்குத் திருப்பி அழைத்துச் சென்றார். இப்படி எத்தனையோ மாதங்கள் கொடுமையாகப் பழிவாங்கப்பட்டேன்.

தன் மனைவியை `பரத்தையர்' என்று சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கும் யாரும் நிச்சயமாக நல்ல கணவனாக இருக்க முடியாது. பிறவியிலேயே முரட்டுக் குணம்கொண்ட நான், ஏனோ அமைதியாக அதைத் தாங்கிக்கொண்டேன். இந்தப் பதிவை இன்று நான் முகநூலில் எழுதும் வரை, நடந்த எந்த விஷயமும் என் மனைவிக்குத் தெரியாது. அவரது அண்ணனுக்கும் தெரியாது. சிறைச்சாலை பாதுகாப்புப் பணியில் நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்பதைத் தவிர!

காலங்கள் உருண்டோடின. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நான்  ஏ.டி.எஸ்பி-யாகப் பணியாற்றிய அலுவலகத்தின் முன், எனது எழுத்தர் யாரிடமோ கத்திக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டேன். `யாரோ பழைய அதிகாரியாம், ஊறுகாய் வியாபாரம் செய்கிறார். `ஒரே ஒரு பாட்டில் ஊறுகாய் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று எரிச்சலூட்டுகிறார்' என்றார். 

நான், `அவரை உள்ளே வரச் சொல்லுங்கள்'  என்றேன். உள்ளே வந்தவரைப் பார்த்ததும் நடுங்கிப்போய்விட்டேன். பயபக்தியோடு எழுந்து நின்று `வாருங்கள் அய்யா' என்று வரவேற்றேன். அவருக்கு என்னை நினைவில்லை. பல வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு சிறைச்சாலையில் என் மனைவியை மிக மிகக் கேவலமாகப் பேசி இழிவுபடுத்திய அதே அதிகாரிதான் அவர். நான் யார் என்று அவரிடம் சொல்லவில்லை. மிகவும் களைப்பாக இருந்த அந்த முன்னாள் அதிகாரிக்குப் பழச்சாறும் உணவும் வாங்கிக் கொடுத்தேன். ஆசுவாசப்படுத்திய பிறகு `சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும்?' என்றேன். 

`நான் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவன். இன்று வறுமையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஒரே ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கிக்கொள்ளுங்கள். எங்கள் குடும்பம் மிகவும் நன்றியுடன் இருப்போம்' என்றார். அவரிடமிருந்த மொத்த ஊறுகாய் பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு மிகப்பெரியத் தொகையைக் கொடுத்தபோது, அவர் மிகவும் பயந்து தடுமாறினார். `உங்களுக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ என் எழுத்தரைத் தொடர்புகொள்ளுங்கள்' என்று சொன்னேன். மிகவும் அழுதார். எனது காவல் துறை வாகனத்திலேயே அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன் 

இளைஞரை தாக்கும் போலீஸ்

அந்தக் கொடுமையான சிறைச்சாலைப் பணி நாள்களில் நான் மட்டும் ஆத்திரப்பட்டிருந்தால், நிச்சயமாக இன்று இத்தனை தம்பி, தங்கைகளும் நல்ல மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்காது. நானும் எனது மனைவியும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காரணம் என்ன தெரியுமா, எங்கள் வேதனைகள் காரணமாக நாங்கள் யாரையும் நிந்தித்ததில்லை. பழிவாங்குவதோ, பொங்கி வெடிப்பதோ வாழ்க்கை அல்ல. இடற்பாடுகளையும் ஏளனங்களையும் கண்ணீரையும் தாங்கிக்கொள்வதே சிறந்த வாழ்க்கை.

நமக்குக் கேடு செய்வோரையும் நேசிப்பதுதான் மிகச்சிறந்த வாழ்க்கை. மன்னிப்பதைப்போல சிறந்த பண்பு வேறில்லை என்பதை காவல் துறை அனுபவங்களிலிருந்து உணர்ந்துகொண்டேன். என் கீழ் பணிபுரிவோருக்கும் அதையே எனது வாழ்த்தாக, வேண்டுகோளாகத் தெரிவிக்கிறேன். எங்களுக்கு என்றுமே ஓய்வில்லை. காரணம், இனிமேல்தான் வாழ வேண்டும், பிறருக்காகவும் எங்களுக்காகவும்!

அன்புடன் 
சம்ப்ரிய குமார்'

இந்தப் பதிவுகுறித்து சம்ப்ரிய குமாரிடம் பேசினோம். 

``போலீஸ் துறையில் கடைநிலை ஊழியர்களின் நிலை இதுதான். நான் எஸ்.ஐ-யாக போலீஸ் பணியில் சேர்ந்தேன். எங்களை மேலதிகாரிகள் இழிவாகவே நடத்தினார்கள். அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் பணிபுரிந்தோம். எந்தச் சூழலிலும் நான் நேர்மையைக் கைவிட்டதில்லை. அதனால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம். பணி உயர்வில்கூட ஏராளமான தடைகள். எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் சகித்துக்கொண்டுதான் பணிபுரிந்தேன். யாரிடமும் எந்தச் சூழலிலும் கை நீட்டியதில்லை. அந்த நிம்மதியுடன் பணியை நிறைவுசெய்தேன் என்ற திருப்தி எனக்குள் இருக்கிறது. இப்போது, நடக்கும் சம்பங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

கடைநிலை காவலர்களின் பிரச்னைகளை, அதிகாரிகள் நினைத்தால் தீர்க்க முடியும். போலீஸ் அதிகாரிகள், தங்களிடம் பணிபுரிபவர்களிடம் மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடக்க வேண்டும்.

தி.நகரில் நேற்று நடந்த சம்பவத்தில், அந்த இளைஞரிடம் போலீஸார் அவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை. எச்சரிக்கை செய்து விடுவித்திருக்கலாம். டிராஃபிக் போலீஸிடம் சிக்குபவர்கள் உடனடியாக செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுப்பதும் போலீஸ் அதிகாரிகளின் கோபத்தைத் தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் சாமானியன் பாதிக்கப்படுவதுபோல போலீஸ் துறையில் கடைநிலை ஊழியர்கள்தாம் பாதிக்கப்படுகிறார்கள்.

உயர் அதிகாரிகளிடம் அடிமைபோல வேலை செய்வதால், மனதளவில் ஏற்படும் வேதனைகளை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறார்கள். திண்டுக்கல்லில் பெண் போலீஸ் ஏட்டு மது அருந்திய விஷயத்தில்கூட அதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிமேல் அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே நரகம்தானே! அதனால், எந்த விஷயத்தையும் மனிதநேயத்துடன் அணுகுவதே சிறந்தது. என்னை மோசமாக நடத்திய இன்ஸ்பெக்டர்கூட அவரது மகன்களால் ஒதுக்கப்பட்டுதான் ஊறுகாய் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வாழ்க்கை ஒரு வட்டம்தானே. அதை யாரும் மறந்துவிடக் கூடாது'' என்றார். 

போலீஸ் உயர் அதிகாரியின் இந்த ஃபேஸ்புக் பதிவு, காவல் துறை அதிகாரிகளுக்கும் மக்களை நிந்தித்து அப்பாவிகளைத் துன்புறுத்தும் சாலையோரக் காவலர்களுக்கும் பொருந்தும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close