குரங்கணி தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம்! - விசாரணை ஆணையர் அதுல்ய மிஸ்ரா தகவல் | "We find the reason behind kurangani fire!" - athulya misra

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (04/04/2018)

கடைசி தொடர்பு:14:46 (04/04/2018)

குரங்கணி தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம்! - விசாரணை ஆணையர் அதுல்ய மிஸ்ரா தகவல்

குரங்கணி

மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த 36 பேர் தீயில் சிக்கி அதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் தமிழகத்தை அதிரவைத்தது.

தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தீக்காயத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இருந்தும் சிகிச்சைப் பலனின்றி தற்போது வரை 22 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆணையராக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். தீ விபத்து குறித்து குரங்கணி மலைப்பகுதியில் நேரடி ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்தித்தும் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து  ஆய்வு நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, இன்று ஈரோட்டில் அதுல்ய மிஸ்ரா ஆய்வு நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர், ஈரோடு மாவட்ட வனப்பாதுகாவலர், ஈரோடு மாவட்ட வன அலுவலர், ஈரோடு எஸ்.பி மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார். சமூக அர்வலர்களிடம், ட்ரெக்கிங்கை ஒழுங்குபடுத்த, பிற்காலத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என ஆலோசனை கேட்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய குரங்கணி தீ விபத்து விசாரணை ஆணையர் அதுல்ய மிஸ்ரா ஐ.பி.எஸ், "கடந்த மாதம் 21-ம் தேதி தீ விபத்து நடந்த குரங்கணி பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். குரங்கணியில் ஏற்பட்ட இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது. டிரெக்கிங்குக்காக எப்படி பர்மிஷன் வாங்கினார்கள். வனத்துறையில் ஏதாவது தவறு நடந்திருக்கிறதா... என்றும் மேலும், டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரித்து வருகிறோம். ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை நடத்தினோம்.

இதுவரை கிட்டத்தட்ட 72 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இன்று ஈரோட்டில் ஆய்வு நடத்தி வருகிறோம். குரங்கணி தீ விபத்தில் சிக்கிய ஈரோட்டைச் சேர்ந்த நேகா மற்றும் சபிதாவை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று சந்தித்து, என்ன நடந்தது என விசாரிக்கவிருக்கிறோம். குரங்கணியில் எப்படி தீ விபத்து நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டோம். அதனை விசாரணை அறிக்கையில் கொடுப்போம். இந்த விசாரணை மற்றும் ஆய்வறிக்கையானது 2 மாதத்துக்குள் அரசிடம் அறிக்கையாக அளிக்கப்படும். மேலும், ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளர் பிரபுவை தேனி மாவட்ட காவல் துறையினர் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்பட்டால் நாங்களும் பிரபுவிடம் விசாரணை மேற்கொள்வோம்" என்றார்.