வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (04/04/2018)

கடைசி தொடர்பு:15:40 (04/04/2018)

`மீம்ஸ் போட்டு களங்கப்படுத்துகிறார்!' - சீமானுக்கு எதிராகச் சீறும் வைகோ

சீமானை தாக்கும் வைகோ

சீமானுக்கு எதிராக சீறும் வைகோ

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரசார நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். நேற்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து தேனி நோக்கி வந்தனர். இடையே, பிரிட்டிஷார் கொண்டுவந்த கைரேகைச்சட்டத்தை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்த, பெருங்காமநல்லூர் சென்றார். அங்கே, வைகோ ஆதரவாளர்களுக்கும், சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.

ஆண்டிபட்டியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வைகோ, ``ஆறேழு ஆண்டுகளாகவே நான் பொறுமையாக இருக்கிறேன். என்னை தமிழன் இல்லை, தெலுங்கன் என்று சீமான் கீழ்தரமாகப் பேசுவதோடு, ஈரோடு ராமசாமி நாயக்கன் பயல் என்றும் எல்லா மேடைகளிலும் பேசினார். இந்த அண்ணாதுரை என்ற முட்டாள் தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டான் என்று தொடக்க காலத்தில் பேசினார். அண்ணாவையும், பெரியாரையும் இப்படிப் பேசுகிறாரே என்று சகித்துக்கொண்டே இருந்தேன். பின்னர் சினிமாக்காரர்கள் சொன்னார்கள், பெரியாரைத் தாக்குவது உங்களை காலிபண்ணுவதற்காகத்தான் என்றார்கள். இதைப் பற்றி நான் வெளியில் பேசுவது இல்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொடிச் சின்னத்தை, அவர் உயிரோடு இல்லை என்று கருதிக்கொண்டு, புலியின் சின்னத்தையே தனது கொடியாகக் கருதிக்கொண்டு, பிரபாகரனுடன் தான் பலநாள் இருந்ததாகவும், வேட்டைக்குச் சென்றதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும் பொய் சொன்னார். இவரை வெறும் எட்டு நிமிடம்தான் பார்க்க அனுமதித்தார் பிரபாகரன். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. பிரபாகரனுடன் போட்டோ எடுத்ததுபோல கிராஃபிக்ஸ் செய்துகொண்டார். புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்று சீமான் கேட்டதற்கு மறுத்துவிட்டார் பிரபாகரன். நான், புலிகள் சீருடையில் ஒரு மாதம் காட்டில் பிரபாகரனுடன் இருந்தவன். உண்மையில், பிரபாகரனிடம் ராணுவப் பயிற்சிபெற்றவன். மயிரிழையில் உயிர்பிழைத்து வந்தவன்.

என்னைப் பற்றி மீம்ஸ் போடுவதற்குக் கணக்கே கிடையாது. ஸ்டெர்லைட்டையும் என்னையும் இணைத்துப் பேசுகிறார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நான் போட்ட ரிட் மனுதான் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், என்னை, `ஸ்டெர்லைட் டீல் முடிந்தது. இப்போது நியூட்ரினோவுக்குக் கிளம்பிட்டான்னு கடைசி மீம்ஸ்`. என் வாழ்நாளில் பழிகளைச் சுமந்தே பழக்கப்பட்டவன். நான் வெளியே வந்தபோது கோஷம் போட்டார்கள். நான் சொன்னேன், நான் கண்ணசைத்தால் ஒரு லட்சம் பேர் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். நம் தோழர்கள் ஆவேசப்பட்டார்கள். அதற்குள் போலீஸ் வந்தது. விலக்கிவிட்டார்கள். இதுதான் நடந்தது`` என்றார்.