வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (04/04/2018)

கடைசி தொடர்பு:15:46 (04/04/2018)

`ஐ.பி.எல் வீரர்களைச் சிறைபிடிப்போம்!' - மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ 

தமிமுன்அன்சாரி

ஐ.பி.எல் வீரர்களைச் சிறைபிடிப்போம் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில்,  ம.ஜ.க பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு கேட்டு எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரிக்காக எல்லோருடனும் இணைந்து போராடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்துள்ளோம். காவிரி விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்கக் கூடாது. அந்த வகையில், நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து நாங்கள் பங்கேற்கிறோம்.

சென்னையில், வரும் 10-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால், அது தமிழ்நாட்டுக்கே வெட்கக்கேடு.

உடனடியாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைத் தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும். மீறி நடத்தினால், மனிதநேய ஜனநாயகக் கட்சியினரும், காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியைத் தடுத்து நிறுத்துவோம். இதையும் மீறி, அங்கு விளையாட வரும்  ஐபிஎல் வீரர்களைச் சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வார்கள்"  என்றார்.