வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (04/04/2018)

கடைசி தொடர்பு:17:05 (04/04/2018)

`கம்பு, குச்சியுடன் வரக் கூடாது!' - போராட்டக்காரர்களுக்கு 14 நிபந்தனைகள் விதித்த போலீஸ்

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிராக, வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்த 14 நிபந்தனைகளை விதித்து போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

ன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிராக, வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்த 14 நிபந்தனைகளை விதித்து போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தகத் துறைமுகம்- போலீஸ் நிபந்தனை

கன்னியாகுமரி அருகே கோவளம் முதல் கீழமணக்குடி வரையுள்ள பகுதியில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் வர்த்தக துறைமுக ஆதரவு இயக்கத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப்பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வரும் 7-ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் துறைமுகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த அதன் ஒருங்கிணைப்பாளர் பிரபா போலீஸில் அனுமதி கேட்டிருந்தார். அதே தினத்தில் துறைமுகத்துக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த துறைமுக ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன் அனுமதி கேட்டிருந்தார்.

இதனால் யாருக்கு அனுமதி வழங்குவது என்பதில் போலீஸாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் 14  நிபந்தனைகளுடன் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினருக்குப் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. வரும் 7-ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் கண்டிப்பாகப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட மதத்தினரையோ தனிநபர்களையோ, அரசியல் சார்ந்த கட்சிகளையோ மற்றும் பிறர் மனம் புண்படும்படியாகவோ பேசக் கூடாது. போராட்டத்துக்கு வருபவர்கள் கம்பு, குச்சி போன்ற ஆயுதங்களையோ மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்களையோ கொண்டுவரக் கூடாது என்பது உள்ளிட்டவை அந்த 14 நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளன.