“உங்களுக்கும் சேர்த்துதான் போராடிக்கிட்டிருக்கோம்!” - போலீஸிடம் எகிறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் #WeWantCMB | CPI protest in coimbatore railway station over cauvery Issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (04/04/2018)

கடைசி தொடர்பு:17:15 (04/04/2018)

“உங்களுக்கும் சேர்த்துதான் போராடிக்கிட்டிருக்கோம்!” - போலீஸிடம் எகிறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் #WeWantCMB

போலீஸ்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. ரயில் மறியல், சாலை மறியல், விமான நிலையம் முற்றுகை என தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக மாறியிருக்கிறது. இந்நிலையில், இன்று கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ரயில் மறியலில், போலீஸாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில், கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ‘ரயில் மறியல் போர்’ நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்கள். அதனால், இன்று காலையிலேயே ரயில் நிலையத்தின் முன்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். காலை11 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் நிலையம் முன்பு ஒன்று திரண்டு, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர். ‘'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது ஆரியம்.  பொய்யும் புரட்டும் பேசிக்கிட்டு, மோடிக்கு  ஜால்ரா போட்டுக்கிட்டு இருக்கிறாரு எடப்பாடி... எதுக்கு உங்களுக்கு நாற்காலி'' என்ற கோஷங்கள் ரயில் நிலையத்தைப் பிளந்தன. கோஷம் போட்டபடியே  முன்னே நகர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள், ரயில் நிலைய நுழைவாயில் முன்பு போலீஸார் அமைத்திருந்த பேரிகார்டுகளைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். 

அதில், போலீஸாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தில் ஒருவரை போலீஸ் பலமாகத் தாக்கிடவே, ஒட்டுமொத்த கூட்டமும் பொங்கி எழுந்தது. ''யாரை அடிக்கிறீங்க? உங்களுக்கும் சேர்த்துதான் போராடிகிட்டு இருக்கோம். காவிரி இல்லைன்னா  தமிழ்நாட்டுல தண்ணீர் பஞ்சம், சோத்துப் பஞ்சம்னு எல்லாமே தலைவிரிச்சு ஆடும். அதுகிட்டபோய் நான் போலீஸுனு முறுக்கிட்டு நிற்க முடியாது. உங்களால் போராட முடியலைன்னா ஓரமாப் போங்க. இப்படி நாட்டுக்காக போராடுறவங்களை அடிச்சு ஒடுக்காதீங்க’' என்று போலீஸாருக்கு எதிராக எகிறினார்கள். ஆனால், போலீஸ் அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்தது. இதையடுத்து, அவர்கள் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாக எல்லோரையும் கைதுசெய்தது காவல்துறை. அதில், பலபேர் நழுவியோடி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களையும் அலேக்காகத் தூக்கி வேனில் ஏற்றிச்சென்றது போலீஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க