வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சிப் போராட்டம்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மதுரை பி.பி.குளம் பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் தென்மண்டல ஒருங்கிணைபாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

நாம் தமிழர்

அப்போது  காவல்துறை அவர்களைத் தடுக்க முயன்றதால், வருமான வரித்துறை அலுவலகக் கேட்டின் உள்பூட்டைப் போராட்டக்காரர்கள் பூட்டினர். இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் திடீரென வருமான வரித்துறை அலுவலகச் சாலையில் தரையில் படுத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைப் போலீஸார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் பி.பி.குளம் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன், ``தமிழக அரசின் சார்பில் பல்வேறு வரிகளை முறையாகக் கொடுத்துவரும் எங்களுக்கு மத்திய அரசின் சார்பில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவமதித்துவிட்டது. அதனால் நாங்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!