`உங்கள் குடும்பம் குடிக்க தண்ணீர் வேண்டாமா?' - போலீஸிடம் சீறிய மாணவர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை காவிரித் துலாக் கட்டத்தில் போராட வந்த மாணவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

மாணவர்கள்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், காவிரியாற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது.  இதனால் உஷாரான காவல்துறை, துலாக்கட்டத்தில் காவிரியின் இரு கரைகளிலும் ஏராளமான போலீஸாரை நிறுத்தியது.  இந்தப் பரபரப்பால், பத்திரிகையாளர்களும் அங்கு கூடி நின்றனர்.  இத்தனை காவல்துறை கட்டுப்பாடுகளையும் மீறி, மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்பைச் சேர்ந்த செல்வராஜன் தலைமையில், மாணவர்களும் இளைஞர்களும் திடீரென ஆற்றுக்குள் இறங்கிப் போராட முயன்றபோது, போலீஸார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர்.  அதன்பிறகு, போராட்டக்காரர்கள் காவிரிப் பாலத்தின் நடுவில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.  அப்போது, 'மோடி அரசே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு.  மதிகெட்ட மத்திய அரசே தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாதே' என்று கோஷமிட்டனர்.  

போராட்டக்காரர்களைக் கைதுசெய்ய வந்த போலீஸ் அதிகாரிகளிடம், ''நீங்களும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்தான்.  உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்.  இது, தனிநபரின் போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டம், புரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பம் குடிக்க தண்ணீர் வேண்டாமா... என்று கேள்வி எழுப்பினர்.  என்றாலும், மயிலாடுதுறை காவிரியாற்றில் இறங்கிப் போராட வந்த மாணவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.  அப்போது, காவிரி நீருக்காக ஆற்றில் இறங்கிப் போராட உரிமை இல்லையா என்று வேதனையுடன் குரல் எழுப்பிச்சென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!