வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (04/04/2018)

கடைசி தொடர்பு:17:30 (04/04/2018)

குப்பைவண்டியில் கொண்டுசெல்லப்பட்ட லட்சாதிபதி முதியவரின் உடல்? - சோளிங்கர் அவலம்

முதியவரின் உடல்

வேலூர் மாவட்டம் சோளிங்கரில், இறுதிச் சடங்குக்காக குப்பைவண்டியில் முதியவர் ஒருவரின் உடல் எடுத்துச்செல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர், ராஜாராம். 70 வயதான இவர், கூலித் தொழிலாளியாக இருந்துவந்தார்.  குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட இவர்,  அந்தப் பகுதியிலேயே  பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி அவர் இறந்துவிட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய சோளிங்கர் போலீஸார், ராஜாராமின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவரது உறவினர்கள், இறுதிச் சடங்கு செய்ய தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததால்,  ராஜாராமின் உடலை பேரூராட்சி நிர்வாகத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர். 

 இதையடுத்து நடந்த சம்பவம்தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாராமின் உடலை, பேரூராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் வைத்து சுடுகாட்டுக்குக் கொண்டுசென்றனர். அதைப் பார்த்த பொதுமக்கள், இப்படியா குப்பை வண்டியில் கொண்டு செல்வது  என்று ஆதங்கப்பட்டனர். குப்பை வண்டியில் முதியவரின் உடல் கொண்டுசெல்வதை, ஒருவர்  வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள், பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர். 

ராஜாராமின் குடும்பப் பின்னணிகுறித்து விசாரித்தோம். ராஜாராமின் தந்தை வைத்தியராக இருந்தார். சொந்த வீடும் சோளிங்கரில் இருந்தது. பெற்றோர் இறந்த பிறகு தனியாக வாழ்ந்தார். கிடைக்கும் வேலைகளைச் செய்வார். ஒருகட்டத்தில், வீட்டை விற்று, பணத்தை வங்கியில் போட்டார். அவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. யாரிடமாவது ராஜாராம் பண உதவிக் கேட்டால், `ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடு, உனக்குப் பணம் தருகிறேன்' என்று சொல்வதுண்டு. இவரது உறவினர் சென்னையை அடுத்த சேலையூரில் இருக்கிறார். அவர்தான் ராஜாராமின் உடலை அடையாளம் காட்டியிருக்கிறார். அதன்பிறகுதான், ராஜாராமின் உடல் சமூக சேவகர் ஒருவர் மூலம் இறுதிச் சடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சோளிங்கரில் அநாதை உடல்களை குப்பை வண்டியில் எடுத்துச்செல்வது வழக்கமானதுதான். ஆனால், அதை முதல்முறையாகப் பார்த்த ஒருவர்தான் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து, சோளிங்கர் போலீஸை போனில் தொடர்புகொண்டோம். முதியவரின் உடலைப் பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர். அதன்பிறகே, அநாதைப் பிணம் என்று அறிவித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் உடலை ஒப்படைத்தோம். அதன்பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. 

சோளிங்கர் பேரூராட்சியின் செயல்அலுவலர் அன்புசெல்வத்திடம் போனில் பேசினோம். ''ராஜாராமின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளோம். அவர் உயிரோடு இருக்கும்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் அலுவலகத்தின் அருகே அடிக்கடி வருவார், அப்போது, நாங்கள் உணவு வாங்கிக் கொடுத்துள்ளோம். அலுவலகத்தில் உள்ள சிலர் பண உதவியும் செய்துள்ளனர். அநாதை  உடல்களை சுடுகாட்டுக்குக் கொண்டுசெல்வதற்கான வாகனம்; பேரூராட்சியில் இல்லை.  அதனால்தான் டிரை சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்டது'' என்றார்.