வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (04/04/2018)

கடைசி தொடர்பு:17:45 (04/04/2018)

ராமநாதபுரத்தில் அஞ்சலகத்துக்கு பூட்டுப் போட்டு போராடிய நாம் தமிழர் கட்சியினர்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்துக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைதுசெய்தனர். 

காவிரி வாரியம் கோரி நாம் தமிழர் அஞ்சலகத்திற்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுவடைந்துவருகின்றன.

ராமநாதபுரத்தில், காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் இன்று, தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் அரண்மனை அருகே அமைந்துள்ள தலைமை அஞ்சலகம் முன்பு திரண்ட அவர்கள், பொதுமக்கள் போல அஞ்சலகத்துக்குள் சென்றனர். உள்ளே சென்றதும், தாங்கள் கையில் கொண்டுவந்த பூட்டால்,  அஞ்சலகத்தின் பிரதான வாயில் கதவைப் பூட்டிவிட்டு, உள்ளே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அஞ்சலகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களைப் பெயின்டால் அழித்தனர். இதனால், அஞ்சலகத்துக்குள் பொதுமக்கள் செல்ல முடியாமலும், உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே வர முடியாமலும் இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அஞ்சலகத்துக்கு வந்து, பூட்டப்பட்ட கேட்டைத்  திறக்க முயன்றனர். ஆனால், உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் தடுத்தனர். இதனால், போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அதன் பின்னர், சுத்தியலால் பூட்டை உடைத்த  போலீஸார் அஞ்சலகத்துக்குள் சென்று, போராட்டக்காரர்களைக்  கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இதனால், சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.