`விளையாட்டு வினையானது' - தோழிகள் கண்முன்னே பறிபோன சிறுமியின் உயிர்

ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டிருக்கும்போது தோழி இறந்ததுகூட தெரியாமல் இருந்த சகதோழிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தச் சோக சம்பவம் ஜெயங்கொண்டத்தில் அரங்கேறியுள்ளது.

                                                          உயிரிழந்த சிறுமி கலையரசி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல்-ராணி தம்பதியின் மகள் கலையரசி. அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஏரியில் ஆழம் அதிகமாக இருந்ததைக் கவனிக்காமல் ஏரியின் உள்பக்கத்துக்குள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கினார்.

எப்போதும் குளத்தில் குளிக்கும்போது யார் அதிக நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள் என்று அவர்களுக்குள் போட்டி நடக்குமாம். இதனால், கலையரசி நீரில் முழ்கியது தெரியாமல் சக தோழிகள் நம்பரை எண்ணிக்கொண்டிருந்தார்களாம். அரை மணி நேரமாகியும் கலையரசி வெளியே வராததால் ஏரியில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் சத்தம்போடவே அவ்வழியாகச் சென்றவர்கள் ஓடி வந்து ஏரியில் இறங்கி சிறுமியைத் தேடினார்கள். 2 மணி நேரத்துக்குப் பிறகு, சிறுமி கலையரசியைச் சடலமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோன கலையரசியின் தந்தை பழனிவேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டட வேலை செய்யும்போது கீழே விழுந்து கால் உடைந்து தற்பொழுது நடக்க முடியாமல் இருந்து வருகிறார். ராணி கூலி வேலை செய்து குடும்பத்தைக் கவனித்து, மகளையும் படிக்க வைத்து வந்தார். இந்நிலையில் சிறுமி இறந்தது, தாய் ராணிக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வி.ஏ.ஓ மாரிமுத்து சம்பவ இடத்தில் விசாரித்த சிறுமி நீரில்தான் மூழ்கி இறந்துள்ளார் என்பதை உறுதி செய்து புகார் தெரிவித்தார். விடுமுறை நாள்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!