வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (04/04/2018)

கடைசி தொடர்பு:19:29 (04/04/2018)

`காவல்துறை தமிழகத்துக்குக் காவலாக உள்ளது!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

காவல்துறை தமிழகத்திற்குக் காவலாக உள்ளது என சென்னையில் நடைபெற்ற காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

`காவல்துறை தமிழகத்துக்குக் காவலாக உள்ளது!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

'காவல்துறை, தமிழகத்துக்குக் காவலாக உள்ளது' என்று சென்னையில் நடைபெற்ற காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

பதக்கங்களை வழங்கிய எடப்பாடி பழனிசாமி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் உள்விளையாட்டு அரங்கில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா மற்றும் மத்திய அரசு, தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில், பல்வேறு சாதனைகள் புரிந்த காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கிக் கௌரவித்தார். 

 நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில் காவல்துறையினர் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். அவர்கள், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பணியாற்றிவருகிறார்கள். அவர்களின் சிரமங்களை அறிந்து, அவர்களின் குறைகளைக் களைந்து, காவல்துறையினர் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்ய நவீன வசதிகளை ஏற்படுத்துவதிலும், குடியிருப்பு, வாகனம் மற்றும் இதர வசதிகளைச் செய்துகொடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. 

காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, கடந்த 2010-11-ம் ஆண்டில் ரூ.2,961 கோடியே 6 லட்சமாக இருந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.7877 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து, காவல்துறைக்கு இந்த அரசு கொடுத்துவரும் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அத்துடன், நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை காவல்துறைக்குத் தமிழக அரசு 722 கோடியே 19 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. காவல்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதோடு, பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளில், தமிழகத்தின் 24,023 காவலர்களும், 1,034 உதவி ஆய்வாளர்களும், 99 துணை கண்காணிப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன், 9,140 பேர் தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல்படைக்குத் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுள், 8,569 பேர் காவலர்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், 1480 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 5,538 காவலர்களைத் தேர்வுசெய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையங்களைத் தேர்வுசெய்வதற்கான போட்டியில், கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் முதன்மை காவல் நிலையமாகவும், சென்னை அண்ணா நகர் காவல்நிலையம், 5-ம் இடத்தையும் பிடித்தன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, காவல்துறையினர் மேலும் சிறப்பாகச் செயல்படத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். காவல்துறையினருக்கு ஏற்படும் மன உளைச்சலைப் போக்கும் வகையிலும், பணியின்போது காவல்துறையினருக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. காவல்துறை, தமிழகத்திற்குக் காவலாக உள்ளது’’என்று பேசினார்.