தமிழ்நாட்டை தனியாகப் பிரிக்கும் அந்தநாள் வரத்தான்போகிறது..! ஆ.ராசா ஆவேசம்

பொன்னமராவதியில், ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள கலைஞர் திடலில், தெற்கு ஒன்றிய நகர தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (04.04.2018) இரவு நடைபெற்றது.

இதில், முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க கழக கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். உடன், திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.ரகுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், 'காவிரி விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுகின்றன. எப்படி என்றால், மத்திய அரசு 'நாங்கள் ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு மனு போடுகிறோம். நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மனு போடுங்கள்' என்று பேசிவைத்துக்கொண்டு, களவாணித்தனம் செய்கிறார்கள்.‌ நீதிமன்றம் 6 வாரம் அவகாசம் கொடுத்தது. ஆனால், 5 வாரங்களை விட்டுவிட்டு 6-வது வாரத்தில் இந்தத் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது, தீர்த்து வையுங்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அநியாயம். இதைக் கேட்கத் துப்பு இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், 'தி.மு.க காவிரிக்காக ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடவில்லை' என்று.

முதன் முதலாக, 'சட்டமன்றத்தில் காவிரிக்கு நடுவர் மன்றம் வேண்டும்' என்று தீர்மானம் கொண்டுவந்தவர் கருணாநிதிதான். 11 வருடம் ஆட்சி பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர்தான் ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடவில்லை. கலைஞர் போட்ட தீர்மானத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம் என்று எம்.ஜி.ஆர் சொல்லவில்லை. 91 முதல் 96 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, காவிரி பற்றி ஜெயலலிதா பேசவில்லை. 

நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்று சொன்னது எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி பேரும் நீட் வேண்டாம் என்று தீர்மானம் போட்டோம். அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்துவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால், குடியரசுத்தலைவர் மாளிகையில் அப்படி தீர்மானம் வரவில்லை என்று சொல்கிறார்கள். கார்கில் போருக்கு 100 கோடி கொடுத்தோம். பாகிஸ்தானை வெற்றிபெற வேண்டும் என்று 6 கோடி கொடுத்தோம். நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால், நாங்கள் வேண்டும்; ஆனால், காவிரிப் பிரச்சினை என்றால் யாரும் வர மாட்டார்கள். எதற்காக இந்தியாவில் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்ற கேள்வி வராதா? அந்த நாள் விரைவில் வரப்போகிறது. ஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியுள்ளது' என்று பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!