தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் துவங்கியுள்ளது.

முழு அடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோ, வேன்கள் ஆகியவை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 80 சதவிகித பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்கங்கள் முன்னதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், அனைத்துப் பேருந்துகளும் இயங்கும் என நேற்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழக - கர்நாடக எல்லையில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு எந்தப் பேருந்தும் இயக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக சுமார்  ஒரு லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!