வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (05/04/2018)

கடைசி தொடர்பு:10:10 (05/04/2018)

கிராமத்தின் தெருக்களில் சிறுத்தையின் கால்தடம்! - பீதியில் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே, சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து நாயைத் தூக்கிச்சென்ற சம்பவத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக்கிடக்கின்றனர். 

சிறுத்தை

Representational Image

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், நெல்லை மாவட்டத்தில் கடனா அணை உள்ளது. அந்த அணையின் அருகே, பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள், விவசாயத்தைத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். அத்துடன், ஆடு மாடு வளர்ப்பையும் செய்துவருகின்றனர். இந்தக் கிராமத்துக்குள் அடிக்கடி வன விலங்குகள் நுழைந்து தொந்தரவுசெய்வது வழக்கமாக உள்ளது. 

இந்தக் கிராமத்துக்குள் மார்ச் 18-ம் தேதி நுழைந்த சிறுத்தை, முருகன் என்பவரது வீட்டில் காவலுக்கு இருந்த  நாயைத் தூக்கிச்சென்றது. அதன்பின்னர், வனத்துறையினரின் நடவடிக்கையால் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பின்னர், அந்தப் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் இல்லாததால், பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக இருந்தனர். ஆனால், அதற்குப் பங்கம் வைப்பதுபோல மீண்டும் கிராமத்துக்குள் சிறுத்தை நடமாடத் தொடங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், தற்போது வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. அதன் காரணமாக, விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், அவை பொதுமக்கள் வசிக்கும் இருப்பிடங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில், கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வன்னிராஜ் என்பவரது வீட்டில் காவலுக்கு இருந்த நாய் காணாமல் போய்விட்டது. 

நாயைக் காணாமல் அதைத் தேடியபோது, வீட்டைச் சுற்றிலும் சிறுத்தையின் கால்தடம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கிராமத்தின் பல்வேறு தெருக்களிலும் சிறுத்தையின் கால்தடம் பதிந்து இருப்பதைப் பார்த்த பொதுமக்கள், பீதியடைந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் சுந்தரேசன் தலைமையில் அங்குச் சென்ற வன ஊழியர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.