வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (05/04/2018)

கடைசி தொடர்பு:10:45 (05/04/2018)

பந்த் எதிரொலி - தமிழக கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் #TNBandhUpdates #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதால், இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

பந்த் எதிரொலியாக எல்லையில் பதற்றம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றன. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் போக்கைக் கண்டித்து கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, மாநில எல்லை அடைப்புப் போராட்டத்தை கன்னட கூட்டமைப்பின் தலைவரும், கன்னட சலுவளி கட்சியின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் நடத்துகிறார். இந்த எல்லை அடைப்புப் போராட்டத்தில், தமிழக வாகனங்களை கர்நாடகாவுக்குள் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களையும், பேருந்துகளையும்கூட தமிழகத்துக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்திருந்தார் வாட்டாள். 

காவிரிப் பிரச்னை தொடர்பாக, இரண்டு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெறுவதால், தமிழக - கர்நாடக எல்லையான ஓசூரை அடுத்துள்ள அத்திப்பள்ளி, மைசூர், ஷிமோகா, கோலார் தங்கவயலில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளை இரு மாநில அரசுகளும் நிறுத்தியுள்ளன. 

தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில், இன்று காலை முதலே போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இரண்டு மாநில போலீஸாரும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டு, வாகனங்களைக் கண்காணித்துவருகின்றனர். பெங்களூரு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள், ஓசூர் பஸ் ஸ்டாண்டு மற்றும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரப் பேருந்துகள்மூலம் பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் அத்திப்பள்ளி சென்று, அங்கிருந்து  கர்நாடகப் பேருந்தில் பெங்களூரு செல்கின்றனர். இதேபோல, தமிழகத்துக்குள் வருகின்றனர். இதனால், தமிழகம் - கர்நாடகப்  பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.