வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (05/04/2018)

கடைசி தொடர்பு:12:45 (05/04/2018)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா தொடக்கம்!

கோவில்பட்டி, அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில், பங்குனித் திருவிழா இன்று  (05.04.18) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 13-ம் தேதி, தேரோட்டம் நடைபெறும். 

பங்குனித் திருவிழா கொடியேற்றம்

 கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்பாள் அரசாட்சி செய்துவருகிறாள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில், பங்குனிப் பெருந் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு பங்குனித்திருவிழா, இன்று (05.04.18) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது.  திருவனந்தல் பூஜை, கணபதி பூஜை, யாக பூஜைகளும், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும்  நடைபெற்றன.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் கொடியேற்றம்

தொடர்ந்து, கொடிப்பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமி சந்நிதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. பிறகு, கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரதீபாராதனை நடைபெற்றது. இன்று துவங்கிய திருவிழா, 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நாள்களில், தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 13-ம் தேதி காலை நடைபெற உள்ளது. 14-ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 15-ம் தேதி தெப்ப உற்சவத் திருவிழாவும் நடைபெறும்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க