வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (05/04/2018)

கடைசி தொடர்பு:11:51 (05/04/2018)

கலிங்கப்பட்டியில் வைகோ இன்று மெளனவிரதம்!

நியூட்ரினோ நடைப்பயணத்தை நிறைவுசெய்த ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, தனது சொந்த ஊரில் இன்று ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதத்துடன் மெளனவிரதம் மேற்கொண்டுவருகிறார்.

வைகோ

வைகோவின் தந்தை வையாபுரி, 1973 ஏப்ரல் 5-ம் தேதி காலமானார். அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தனது தந்தை மறைந்த நாளில், சொந்தக் கிராமமான கலிங்கப்பட்டியில் மெளனவிரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நாளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அவர் தண்ணீர் கூடப் பருகாமல் உண்ணாவிரதம் இருப்பதுடன், மெளனத்தையும் கடைப்பிடிக்கிறார்.

அதன்படி, இன்று வைகோவின் தந்தை மறைந்த தினம் என்பதால், இன்று உண்ணாவிரதத்துடன் மெளனவிரதம் கடைப்பிடிக்கிறார். கலிங்கப்பட்டியில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கும் அவர், புத்தகங்கள் வாசிப்பது, எழுதுவது போன்ற பணிகளை மட்டுமே மேற்கொள்கிறார். அரசியல் ரீதியான சந்திப்புகள், வெளியூர் பயணம் உள்ளிட்டவற்றை அவர் இன்று தவிர்த்துவிடுவதுடன், தொண்டர்களையும் சந்திப்பதில்லை. வைகோவைப் பொறுத்த வரை, மறைந்த தனது தந்தை வையாபுரி, தாயார் மாரியம்மாள் ஆகியோர் மீது மாறாத அன்பும் பாசமும் கொண்டவர் என்பதால், கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து மௌன விரதம் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.