வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (05/04/2018)

கடைசி தொடர்பு:15:23 (05/04/2018)

காவிரிக்காக எதிர்க்கட்சிகளின் முழுஅடைப்புப் போராட்டம்! #TNBandhUpdates

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

தி.மு.க தலைமையிலான முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவும் ஆதரவு அளித்துள்ளார். மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஸ்தம்பித்தது கோவை...!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இன்று முழு அடைப்பு நடைபெற்றது. 90 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, ப்ரூக் ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய ஷாப்பிங் மால்களும் மூடப்பட்டிருந்தன. தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமே, கோவை நகரில் 16 இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேபோல, வழக்கறிஞர்கள் தொடர்ந்து 3-வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும், மாணவர் அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில், கணியூர் டோல்கோட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 1 மணி நேரமும் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. டோல்கேட்டில் எந்த வாகனமும் கட்டணம் செலுத்தவில்லை. இதனிடையே, பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கர்நாடகாவுக்கு இன்று பேருந்துகள் இயக்கப்படவில்லை. மற்ற பேருந்துகளும் வழக்கத்தைவிடச் சற்று குறைவாகவே இயக்கப்படுகின்றன.  காளபட்டி, நேரு நகர் மற்றும் சரவணம்பட்டியில், பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

-இரா.குருபிரசாத்

சேலத்தில் ரயில் மீது கற்கள் வீச்சு... அஞ்சல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

சேலத்தில் சேலம் ஜங்ஷன், கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் போன்ற பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள்  நடைப்பெற்றது. செலம் மாவட்டம் முழுவதும் 95 சதவீத வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், பேருந்துகள் இயக்கப்படாமல் முழு கடையடைப்பு இருபதால் சேலத்தின் பிரதான சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

இன்று காலை 10:00 மணிக்கு ரயில் மறியல் செய்வதற்காக தி.மு.க., தலைமையில் அதன் தோழமை கட்சிகள்  சுமார் 2000க்கும் மேற்பட்டவர்கள் சேலம் ஜங்ஷனில் கூடினார்கள். காங்கிரஸ் கட்சியினர் வினோத முறையில் தண்ணீர் இல்லாத புதுப்பானையோடு வந்திருந்தார்கள். அதையடுத்து  ஜங்ஷன் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தார்கள். 

காவல்துறையினர் தடுப்புகளை கொடுத்துத் தடுத்தார்கள். தடுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு காவல்துறையினர் சிலர் தவறி கீழே விழ அவர்களை மிதித்துக் கொண்டே ரயில்வே பாதையில் ஓடினார்கள். அப்போது பெங்களூரு டூ எர்ணாகுலம் ரயில் வந்து கொண்டிருந்தது. அதன் மீது சரமாரியாக கற்களை வீசி நிற்க வைத்து ரயில் மேற்கூரை மீது ஏறி கோஷங்கள் எழுப்பினார்கள். தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் ரயில் மீது ஏறி ''அமைத்திடு அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு''என்ற கோஷத்தை எழுப்பினார்.

ரயிலை 40 நிமிடம் சிறைபிடித்தவர்கள் பிறகு விடுவித்து விட்டு வெளியே வந்தார்கள். அவர்களைக் காவல்துறையினர் வாகனத்திற்கு ஏற்றி வாணி மஹால் திருமண மண்டபம், எம்.எஸ்.வி., திருமண மண்டபம் ஆகிய திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்றார்கள். இச்சம்பவத்தால் பெண் காவலர் 3 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டதை அடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மர்ம நபர்கள் சிலர் சேலம் லைன்மேடு பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த அஞ்சல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டுச் சென்றார்கள். இச்சம்பவத்தில் பெரிதாக யாருக்கும் காயம் இல்லை.  

-வி.கே.ரமேஷ், க.தனசேகரன் 

 

கோவையில் வலுத்த போராட்டம்...!

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் கோவையின் பல்வேறு இடங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க  எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் அனைத்துக்கட்சிகள் சார்பாக  ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, ஆதிதமிழர் பேரவை, ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள்,  மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு  போலீஸார் அமைத்திருந்த பேரிகார்டுகளை தகர்த்துக்கொண்டு ரயில் நுழைந்து ரயிலை மறிக்கக் காத்திருந்தார்கள். ஆனால் சேலம், ஈரோடு,திருப்பூர் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  ரயிலை மறித்துவிட்டதால் அந்த நேரத்தில்  கோவை வர வேண்டிய ரயில்கள் எதுவும் வரவில்லை.  மறிப்பதற்கு ரயில் இல்லாததால், அவர்கள் அத்துனைபேரும்  ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள சாலைக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல, வடகோவையில் இருக்கும் ரயில் நிலையத்தில்  முன்னாள் தி.மு.க அமைச்சர் பொங்லூர் பழனிச்சாமியின் தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முழு அடைப்பு

அவர்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை சென்றுகொண்டிருந்த பாசஞ்சர் ரயிலை மறித்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அடுத்ததாக, தி.மு.கவின் முன்னாள் மாவட்ட செயலாளர் வீரகோபால் தலைமையில்   200-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கோவை அவினாசி சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலத்தை  முற்றுகையிட்டனர். அப்போது,  அவர்கள் இலை தழைகளை மாலையாக அணிந்துகொண்டு, எலி பொம்மையை வாயில் கவ்விக்கொண்டும், கஞ்சித்தொட்டி அமைத்தும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். தமிழகம் முழுக்க தி.மு.கவோடு காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில் கோவையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் தனியாக ரயில் மறியலில் ஈடுபட்டனர். தி.மு.கவும், காங்கிரஸும் தனித்தனியாக போராட்டம் நடத்தியது குறித்து சர்ச்சை எழுந்தது.  திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பினர். 

-எம்.புண்ணியமூர்த்தி , தி.விஜய்

புதுச்சேரியில் நீடிக்கும் பதற்றம்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் உருவ பொம்மை புதுச்சேரியில் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம்-புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தி.மு.க அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்தி ஆளும் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. நான்குக்கும் மேற்பட்ட தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

புதுச்சேரி

சற்று நேரத்திற்கு முன்பு திமுக எம்.எல்.ஏ சிவா தலைமையில் புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு எதிரில் அனைத்துக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரதமர்  நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

மோடி

திடீரென பிரதமர்  நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எடுத்துவந்து தீயிட்டுக் கொளுத்தி, செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவரக்ளுக்கும் போலீஸுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து தீயை அணைத்த போலீஸார் உருவ பொம்மையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

-ஜெ.முருகன், தனம் ஏ கே

ஸ்தம்பித்த ஆவடி ரயில் நிலையம்..

திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன.

முழு அடைப்பு

ஆவடி ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலை மக்கள் அதிகாரம் அமைப்பினர்  தண்டவாளத்தில்படுத்து முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் ரயில் மறியலில் ஈடுபட்டதால் ஆவடி ரயில் நிலையம் ஸ்தம்பித்தது.

முழு அடைப்பு

அந்த ரயில் தடத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆவடியில் இன்று கேந்திரா வித்யாலையா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

-தேவேந்திரன்

திருச்சியில் சாலையில் படுத்துப் போராடிய விவசாயிகள்..

 
சாலை மறியல்
இன்று திருச்சியில் பல்வேறு இடங்களில் காவிரிக்காக போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை திருச்சி தபால் நிலையம் முன்பாக தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு ஏரி ஆறு பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
மறியல்

முன்னாள் அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க  தலைவர் அய்யாக்கண்ணு, பூ. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

அப்போது தி.மு.கவினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்து அருகில் உள்ள காந்தி சிலையைச் சுற்றியுள்ள ரவுண்டானாவைச் சுற்றி சாலை அமர்ந்து மறியலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபட்டனர். இதனால்  வாகனங்கள் சாலையில் போக முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்தவழியே வந்த அரசு பேருந்து மீது போராட்டக்காரர்கள் ஏறி அமர்ந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் விவசாய அமைப்பினர் சாலையில் படுத்து மண்பானையை வயிற்றில் வைத்து தண்ணீர் கேட்டுப் போராடினர்.

காவிரி
இதனிடையே அங்கிருந்த மனித நேய மக்கள் கட்சியினர் மத்தியில் ஆளும் பி.ஜே.பியின் கொடியை எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் அதனைத் தடுத்து போராட்டக்காரர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
-சி.ஆனந்தகுமார், என்.ஜி.மணிகண்டன்
 
*வேலூரில் ஏழு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு
-க.முரளி
 
ராமேஸ்வரம் அஞ்சலகத்தினை பூட்டி, இந்தி எழுத்துக்களில் மை பூசி அழித்து தமிழர் நல பேரியக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
முழு அடைப்பு
 
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழர் தேசிய கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் தொண்டியிலும், தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர் ஆர்.எஸ்.மங்கலத்திலும் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்கள் போலிஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-இரா.மோகன்

 

திண்டுக்கல்லில் 10 பேருந்துகள் கண்ணாடி உடைப்பு...
திண்டுக்கல்லில் இன்று காலையில் 80 சதவிகிதம் பேருந்துகள் இயங்கி வந்தன.இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து சீலப்பாடி பைபாஸ், தோமையார்புரம் உள்ளிட்ட பலபகுதிகளில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

முழு அடைப்பு

நகரில் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதனால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. திண்டுக்கல் - பழநி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, லியோனி, பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

முழு அடைப்பு

நத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், ஒட்டன்சத்திரம் பகுதியில் மறியல் செய்த சட்டமன்ற திமுக கொறடா சக்கரபாணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

-ஆர்.குமரேசன்

 

தஞ்சையில் மாதர் சங்கம் முன்னெடுத்த ரயில்மறியல் போராட்டம்..

தஞ்சாவூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திக் கடை அடைப்பு, பேருந்து மறியல், ரயில் மறியல் எனப் பல போராட்டங்கள் நடைபெற்றது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வாசுகி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

முழு அடைப்பு

ரயில்நிலையத்துக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நின்று, அந்த வழியாக வந்த எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.

முழு அடைப்பு
 

பின்னர் ரயில் முன்பு தண்டவாளத்தில் பேரணியாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ரயில்வே ஜங்ஷன்வரை வந்தனர். அவர்களுக்குப் பின்னர் ரயில் மெதுவாக ஊர்ந்து வந்தது. இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. எல்லோரும் ரயிலை மறிக்க ஜங்ஷனில் காத்திருக்க வாசுகி மட்டும் முன்னே சென்று ரயிலை மறித்தார்.

-கே.குணசீலன், ம.அரவிந்த்

நெல்லையில் ரயில் சிறைபிடிப்பு..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

முழு அடைப்பு

முன்னாள் சபாநாயகரும் தி.மு.க-வின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ரயில் நிலையத்தினுள் செல்ல முடியாதபடி போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்தினுள் நுழைந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். அப்போது ரயில் நிலையத்துக்குள் ரயில் எதுவும் வராத நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த இன்ஜின் மீது ஏறி மறியல் செய்தனர். இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.