``அண்ணா இப்ப ஜெயில்ல இருக்கான்... விட்டுறச் சொல்லுங்க சார்” - தி.நகர் சம்பவத்தால் உருக்குலைந்த குடும்பம்! | T.Nagar police beating incident: "Please ask them to free my brother," says, sister

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (05/04/2018)

கடைசி தொடர்பு:19:29 (05/04/2018)

``அண்ணா இப்ப ஜெயில்ல இருக்கான்... விட்டுறச் சொல்லுங்க சார்” - தி.நகர் சம்பவத்தால் உருக்குலைந்த குடும்பம்!

``அண்ணா இப்ப ஜெயில்ல இருக்கான்... விட்டுறச் சொல்லுங்க சார்” - தி.நகர் சம்பவத்தால் உருக்குலைந்த குடும்பம்!

``ண்ணா வேலைக்குப் போயி மூணு மாசம்தான் ஆகுது. சம்பளம் வாங்கி தங்கச்சிக்கும் உனக்கும் ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்மான்னு அடிக்கடி அம்மாக்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பான். திங்கட்கிழமை சாயந்திரம் திடீர்ணு `ரேவதி சாயந்திரம் ரெடியா இரும்மா. அம்மாவ கூட்டிட்டு தி.நகர் போலாம். உனக்கும் அம்மாவுக்கும் புடிச்சதை வாங்கித் தர்றேன்'னு ஆசையா சொன்னான். நானும் அம்மாவும் அண்ணாவோட ஆசை ஆசையா பைக்ல போனோம். ஆனா, நான் மட்டும்தான் திரும்ப வீட்டுக்கு வந்துருக்கேன். அண்ணா போலீஸ் ஸ்டேஷன்லயும் அம்மா ஆஸ்பத்திரியிலயும் கெடக்குறாங்க” தொண்டை அடைக்கக் கண்ணீரோடு பேசுகிறார் ரேவதி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தி.நகரில் ட்ராஃபிக் போலீஸாரால் தாக்கப்பட்ட பிரகாஷின் தங்கை. 

தி.நகரில் பிரகாஷை தாக்கும் போலீஸ்

``அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது இப்பவும் மனசு படபடன்னு அடிச்சிக்குதுங்க. அன்னைக்குச் சாயந்தரம் சரியா 4.30 மணிக்கு நாங்க தி.நகர் போயிருந்தோம். முதல்ல எனக்கும் அம்மாவுக்கும் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தான். அப்பறமா எனக்காக ஒரு ஜூவல்ஸ் வாங்கிக் கொடுத்தான். `தங்கச்சியோட கல்யாணத்துக்கு இப்போ இருந்தே கொஞ்சம் கொஞ்சமா நகை சேர்த்து வைக்கணும்மா. அப்போதான் அவளை நல்லபடியா கரை சேக்க முடியும்'னு அம்மாட்ட சொன்னப்போ அவங்களுக்குக் கண்ணீரே வந்துடுச்சு. `உன் அப்பா இல்லாத குறைய உன் அண்ணன் தீத்து வைப்பான்டி'ன்னு சொல்லி அம்மா பூரிச்சுப் போனாங்க. பர்ச்சேஸ்லாம் முடிஞ்சு நாங்க தி.நகர்லிருந்து கிளம்புறதுக்கு 6.30 மணி ஆகிடுச்சு. அப்போ கூட்டமும் ரொம்ப அதிகமா இருந்ததால அண்ணாவால ஹெல்மெட் போட்டுக்கிட்டே வண்டி ஓட்ட முடியல. அப்போ நான்தான் கொஞ்ச தூரம் போய் மாட்டிக்கோணா. ஏன் சங்கடப்படுறேன்னு சொன்னேன். பைக்க ஸ்டார்ட் பண்ணி கொஞ்சதூரம்தான் நகர்ந்திருப்போம் உடனே போலீஸ்காரங்க பிடிச்சிட்டாங்க.  

நாங்க பைக்லிருந்து இறங்கினதும், `ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்ட முடியாதா? அதுவும் ரெண்டு பேர உக்கார வெச்சுருக்குற. ஏன் ஆட்டோல போக வேண்டியதுதானே'ன்னு போலீஸ் கேட்டதும், `சார் இது எங்க வண்டி. நாங்க ஏன் வரக் கூடாது. கூட்டமா இருந்ததால ஹெல்மெட் போட முடியல'ன்னு அண்ணா சொல்லிட்டே இருக்கும்போது ஒரு போலீஸ் மொபைல்ல வீடியோ எடுக்க ஆரம்பிச்சாரு. அவரு என்னையும் சேர்த்துப் படம் பிடிச்சதும் அண்ணாவுக்குக் கோபம் வந்துடுச்சு. `ஏன் சார் என் தங்கச்சியையும் வீடியோ எடுக்குறீங்க'ன்னு சொல்லி வெடுக்குன்னு அவங்க போனை பிடுங்கினான். அவ்வளவுதான் அந்த போலீஸ்காரருக்குக் கோபம் வந்துடுச்சு. அண்ணனைப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணனை அடிக்க ஆரம்பிச்சதும் அம்மா போய் போலீஸை தடுத்தாங்க. அவனை அடிக்க விடாம புடிச்சிக்கிட்டாங்க. ஆனா, அம்மாவையும் போலீஸ்காரங்க தள்ளிவிட அண்ணாவுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. அங்க இருந்த யாருமே போலீஸை தட்டிக் கேட்கல. போலீஸ்காரங்க அண்ணனோட கைய முறுக்க ஆரம்பிச்சாங்க. அதப்பாத்ததும் அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்துடுச்சு. அப்போதான் அந்த வழியா போய்க்கிட்டு இருந்த மூணு அண்ணங்க ஹெல்ப்புக்கு வந்தாங்க. அதுக்கப்பறம்தான் அம்மாவ கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனோம்” இப்போ அம்மாவ பக்கத்துல இருந்து பாத்துக்குறதுக்குக்கூட அண்ணா இல்ல. அவன் ஜெயில்ல இருக்கான். ப்ளீஸ் சார் உங்களால முடிஞ்சா போலீஸ்காரங்ககிட்ட சொல்லி அவனை விட்டுறச் சொல்லுங்க” கண்ணீரோடு ரேவதி சொல்ல பக்கத்திலிருந்த அவர் சித்தி நம்மிடம் பேசுகிறார். 

``நான் பிரகாஷ்க்குச் சித்தி முறை வேணும் தம்பி. பிரகாஷ் ரொம்ப நல்ல பையன். அவன் அப்பா இப்போ சமீபத்தில்தான் இறந்து போனாரு. அவன் அப்பா இல்லாத குறைய பிரகாஷ்தான் தீர்த்து வெச்சான். என்ஜினீயரிங் முடிச்சிட்டு இப்போ 3 மாசமாதான் ஒரு கார் கம்பெனிக்கு வேலைக்குப் போயிட்டு இருக்கான். போலீஸ்காரங்க அவன் கைய முறுக்கி அடக்குறாங்களே. ஒரு வேளை அவன் கை உடைஞ்சி போயிருந்தா இந்தக் குடும்பத்துக்கு அவங்களாப்பா கஞ்சி ஊத்துவாங்க. நேத்து காலைல ஸ்டேஷனுக்குப் போயி பிரகாஷ பாத்தோம். சட்டைகூட இல்லாம உக்காந்துருந்தான். அவன் அம்மாவ பாத்துக்குறதுக்குக் கூட ஆளு இல்ல. போலீஸ்காரங்க கொஞ்சமாவது கருணை காட்டணும்யா” தழுதழுத்த குரலில் பேசுகிறார் பிரகாஷின் சித்தி. 

இதுகுறித்து சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றோம். அங்கு நின்றுகொண்டிருந்த ட்ராஃபிக் போலீஸ் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டதும், ``சார் நானே நேத்துதான் வாட்ஸ் அப்ல வீடியோ பாத்து தெரிஞ்சிக்கிட்டேன். ரெண்டு பக்கமும் தப்பு இருக்குற மாதிரிதான் தெரியுது. நானும் ஒரு ட்ராஃபிக் போலீஸ்ங்குற முறையில உங்ககிட்ட பர்சனலா சொல்றேன். அந்த இடத்துல இருந்த போலீஸ்காரங்க அந்தப் பையன எச்சரிக்கை பண்ணி அனுப்பியிருக்கலாம். பாவம் குடும்பத்தோட வந்திருந்தான். எத்தனையோ பேரை நாங்க திட்டி அனுப்புறோம். ஃபைன் போடுறோம். அது மாதிரி அவனையும் வார்ன் பண்ணி அனுப்பியிருக்கலாம்” என்றார். 

பிரகாஷை தாக்கிய ட்ராஃபிக் எஸ்.ஐ சுரேஷூடன் தொலைபேசியில் பேசியபோது, ``நான் இந்தச் சம்பவம் குறித்த அனைத்து ஆதாரங்களையும் தகவல்களையும் மேலதிகாரியிடம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் அதை முறைப்படி விசாரிப்பார்கள். அதற்கிடையில் உங்களிடம் தனிப்பட்ட முறையில் என்னால் எந்தத் தகவல்களையும் சொல்ல முடியாது” என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார். 

ஹெல்மெட் அணியாமல் செல்வோரைக் காவல்துறை எச்சரிப்பது அவர்கள் கடமையே. ஆனாலும், சில நேரங்களில் காவல்துறையும் பொதுமக்களும் தங்களுடைய எல்லையை மீறும்போதே இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றன. எது எப்படியோ தன் அண்ணனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரேவதிக்குச் சீக்கிரமே நல்ல தகவல் போய்ச் சேரட்டும். 


டிரெண்டிங் @ விகடன்