`பா.ஜ.கவும் வேண்டாம்; காங்கிரஸும் வேண்டாம்!' - தனி ரூட்டில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் | Neither congress, Nor BJP, GK Vasan has a different idea to set foot in TN

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (05/04/2018)

கடைசி தொடர்பு:12:38 (05/04/2018)

`பா.ஜ.கவும் வேண்டாம்; காங்கிரஸும் வேண்டாம்!' - தனி ரூட்டில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்

`அனைத்துக் கட்சி கூட்டம் எனச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறவர்கள்கூட எங்களை அழைப்பதில்லை. மக்கள் பிரச்னைக்காக நாங்களே அவர்களுடன் சென்று போராடுகிறோம்' என ஆதங்கப்படுகின்றனர் த.மா.காவினர். 

ஜி.கே.வாசன்

காவிரி பிரச்னைக்காகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுவது, கையெழுத்து இயக்கம் நடத்துவது எனப் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். `அனைத்துக் கட்சி கூட்டம் எனச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறவர்கள்கூட எங்களை அழைப்பதில்லை. மக்கள் பிரச்னைக்காக நாங்களே அவர்களுடன் சென்று போராடுகிறோம்' என ஆதங்கப்படுகின்றனர் த.மா.காவினர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் காவிரி விவகாரத்துக்காக ஒரே குரலில் ஒன்று திரண்டுள்ளன. ஆர்.கே.நகர் தோல்வியால் துவண்டு போயிருந்த தி.மு.க, காவிரி பிரச்னையில் மிகுந்த வீரியத்துடன் களமிறங்கியுள்ளது. `தமிழகத்தில் நாங்கள்தான் நம்பர் ஒன்' என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதேநேரம், ' காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்' எனக் குடியரசுத் தலைவர், பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு மட்டுமல்லாமல், மக்களிடம் சென்று கையெழுத்து வேட்டையையும் நடத்திக்கொண்டிருக்கிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய த.மா.கா மூத்த நிர்வாகி ஒருவர், ``காவிரி விவகாரம் முடிவுக்கு வராததற்குப் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். எங்களிடம் ஜி.கே.வாசன் பேசும்போதும், `காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்று இல்லவே இல்லை. தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்காத அந்தக் கட்சியைப் பற்றிப் பேசி நேரத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை' என வெளிப்படையாகப் பேசினார். இதற்குக் காரணம், `கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுதான் நடந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரையும் ஸ்டாலினையும் சந்திக்க ஏன் அனுமதி மறுக்கிறார் அந்த மாநில முதல்வர் சித்தராமையா. காவிரி பிரச்னைக்காக பிரதமர் மோடி அப்பாயின்ட்மென்ட் தரவில்லையென்று கொதிக்கிறார்கள். கர்நாடக முதல்வர் மட்டும் இவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டாரா? தமிழ்நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை எனக் கர்நாடக காங்கிரஸ் நினைக்கிறது. தமிழ்நாட்டில் 12 தலைவர்களை வைத்துக் கொண்டு தமிழக காங்கிரஸ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நமது வாழ்வாதார உரிமைகளைப் பற்றிக் கவலையில்லை' எனக் கட்சி நிர்வாகிகளிடம் கொதித்தார் ஜி.கே.வாசன். 

`தமிழ்நாட்டில் நாம் தனியாக இந்த இயக்கத்தை நடத்துகிறோம். எதிர்காலத்தில் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளருவோம். தமிழ்நாட்டில் வாக்குவங்கியே இல்லாத கட்சி காங்கிரஸ்' என கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் படும்பாட்டையும் நாங்கள் கவனித்து வருகிறோம். தி.மு.க வில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித மரியாதையும் இல்லை. ராயபுரத்தில் தி.மு.க மா.செ சேகர்பாபு நடத்திய கூட்டத்துக்குப் பீட்டர் அல்போன்ஸ் சென்றிருக்கிறார். `என்னைக் கேட்காமல் எப்படி வரலாம்?' என காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் திரவியம் கேட்கிறார். இந்த விவகாரம் மோதலாக வெடிக்க, காங்கிரஸ் நிர்வாகிகளை தி.மு.கவினர் அடித்து விரட்டுகின்றனர். இப்படித்தான் இவர்களது கூட்டணி சென்று கொண்டிருக்கிறது. பணமோசடி வழக்கில் சிறை சென்ற கார்த்தி சிதம்பரத்தை தியாகியாகச் சித்தரித்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். 'இவர்களையெல்லாம் ஆட்சியில் அமர வைத்தால் தமிழ்நாடே காணாமல் போய்விடும்' என விவாதம் ஒன்றில் கொந்தளித்தனர் த.மா.கா நிர்வாகிகள்" என விவரித்தவர், 

`` சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் வாசன். தி.மு.க கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் என போஸ்டர் அடிக்கிறார்கள். இன்று தி.மு.க நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்குக்கூட நாங்களாகச் சென்றுதான் ஆதரவு கொடுத்திருக்கிறோம். `காவிரி விவகாரத்தில் அரசியல் தேவையில்லை. தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னை இது. அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்' எனத் தெளிவாகக் கூறிவிட்டார் ஜி.கே.வாசன். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், `பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் சேர வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார். `முல்லைப்பெரியாறு, காவிரி, முல்லைப்பெரியாறு உள்பட அனைத்து விவகாரங்களிலும் மத்தியில் உள்ள தேசியக் கட்சிகள் துரோகம் செய்கின்றன. இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்' என ஒவ்வொருமுறை நடக்கும் கட்சிக் கூட்டத்திலும் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். `கர்நாடக வாக்குகளுக்காக தமிழர்களைப் புறக்கணிப்பதால், தேசியக் கட்சிகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என்பதுதான் அவருடைய நிலைப்பாடு" என்றார் நிதானமாக. 
 


டிரெண்டிங் @ விகடன்