``எல்லாவற்றுக்கும் சமூக வலைதளம் என்றால், சட்டமோ நீதிமன்றமோ எதற்கு?" - வழக்கறிஞர் சுதா! | "Social media cannot give solutions to all problems" - says, Advocate Sudha

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (05/04/2018)

கடைசி தொடர்பு:12:58 (05/04/2018)

``எல்லாவற்றுக்கும் சமூக வலைதளம் என்றால், சட்டமோ நீதிமன்றமோ எதற்கு?" - வழக்கறிஞர் சுதா!

``எல்லாவற்றுக்கும் சமூக வலைதளம் என்றால், சட்டமோ நீதிமன்றமோ எதற்கு?

ருவரின் சம்மதம் இல்லாமல், அவரைப்  போட்டோ எடுப்பதும், வீடியோ எடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன் இரண்டு பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகப் பரவியது. அப்படி வெளியான வீடியோக்களில் ஒன்றில் சென்னை ஏ.டி.ஜி.பி-யின் மகளும், இன்னொன்றில் பழனியில் ஏட்டாகப் பணிபுரியும் பெண் காவலரும் இடம்பெற்றிருந்தனர்.

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் மக்கள் போராட்டம் நடத்தத் திரண்டனர். இதைத் தடுக்க, மக்கள் கூட்டமாகக் கடற்கரைக்கு வராமல் இருப்பதை போலீஸார் உறுதி செய்வதற்கு முடிவெடுத்து, பீச் செல்லும் அணுகு சாலைகளில் தடுப்புகளை வைத்து கடற்கரைக்குச் செல்லும் வழியை மூடி வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை கடற்கரைக்குச் செல்லமுயன்ற சொகுசு கார் ஒன்றை, பணியில் இருந்த காவலர் ஒருவர் தடுத்து நிறுத்துவதும், காரை ஓட்டி வந்தவருடன் அதில் இருந்த ஒரு பெண் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அந்தக் காவலர், காரைப் படம் பிடிக்க முயன்றபோது, காரில் இருந்தவர்களுக்கும், காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், காரை ஓட்டி வந்தவர், ``இந்தப் பெண் டி.ஐ.ஜி-யின் மகள்" என்று குறிப்பிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவர்களை வீடியோ எடுக்க முயற்சி செய்த காவலரைப் பார்த்து, அந்தப் பெண், "எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்? வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள்" என்று கூறுகிறார். மேலும் ``உங்க பெயர் என்ன? நீங்க பணியில் இருக்க வேண்டாமா?' என்பன போன்ற கேள்விகளைக் கேட்கும் காட்சிகளும் அதில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. 

சமூக வலைதளம்

இன்னொரு வீடியோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண் காவலர் ஒருவர், காரில் தன் நண்பருடன், போலீஸ் சீருடையில் மது அருந்தும் காட்சி இடம்பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வலம் வந்து கொண்டிருந்தபோதே, ``ஒரு பெண் எப்படி மது அருந்தலாம்? மது அருந்துவதில் தவறில்லை. ஆனால், போலீஸ் சீருடை அணிந்துகொண்டு அருந்துவதுதான் தவறு" போன்ற கருத்துகளைப் பலரும் பதிவிட்டு, அதுபற்றி விவாதித்தனர். 

இதுகுறித்து க்ரைம் துறையைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ``போலீஸார் வீடியோ எடுத்தது, ஆதாரத்திற்காக இருக்கலாம். ஆனால், அதைச் சமூக வலைதளங்களில் பகிர்வது தவறு. ஒருவரின் அனுமதியின்றி இதுபோன்ற வீடியோக்களைப் பகிர்வது யாராக இருந்தாலும் அது தவறுதான்" என்றனர்.

சமூக ஆர்வலர் ஓவியாசமூக ஆர்வலர் ஓவியாவிடம் பேசினோம், ``காவல்துறையினர் சொகுசுக் காரை சோதனை நடத்த வேண்டும் என்று சொல்லும்போது, அதற்குச்  சம்பந்தப்பட்டவர்கள் முறையாக அனுமதித்திருக்கலாம். போராட்டம் ஏதும் நடைபெறாமல் தடுக்க, போலீஸார் கடற்கரைப் பகுதியில் தடை விதித்து, அந்தத் தடை அமலில் இருப்பதால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தையுமே சோதனை நடத்துகிறார்கள். இந்த விஷயத்தை ஒரு பெண்ணுடைய தனிப்பட்ட பிரச்னையாக நான் பார்க்கவில்லை. ஒரு உயர் அதிகாரியின் மகள் வந்த காரை சோதனை செய்வதால், எந்த நேரமும் பணி தொடர்பான ஆபத்து வரலாம் என்ற பயத்திலும் அந்தக் காவலர் வீடியோ எடுத்திருக்கலாம். இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தால், அது சட்டப்படி குற்றம். அதற்கான விளைவுகளை அவர் சந்திப்பார். ஆனால், வேறு யாராவது வெளியிட்டிருந்தால், அதை ஒன்றும் செய்வதற்கு இல்லை. மக்கள் அவர்களுக்குக்  கிடைத்த ஒரு பொதுத் தளமாக  சமூக வலைதளங்களைப் பார்க்கிறார்கள். ஏனென்றால், சமூக வலைதளத்தில் வீடியோக்கள் பகிரும் அனைவரும் தங்களை போலீஸாகவும், நீதிபதிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். இப்படித்  தனி நபரைச்  சுட்டிக்காட்டும் வகையிலான வீடியோக்களைப் பகிர்வது நல்லதல்ல. அது பிற்காலத்தில் பலரையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எதற்காக தனித்தனியாக நீதித்துறை, காவல்துறை போன்ற துறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன ? அந்தத் துறைகள் தொடர்பான பிரச்னைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மேலும், ஒரு பதவியில் இருக்கும் அதிகாரி, அவருடைய குடும்பத்தினரிடம் அதிகாரத்தை சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவது தவறு என்பதையும், அந்த அதிகாரத்தை எதற்காகவும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம். காவல்துறையினருக்கும் அவர்கள் பணியில் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கும். அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர வேண்டும், எதைப் பகிரக் கூடாது என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்து, அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டிய தேவை இப்போது இருக்கிறது"வழக்கறிஞர் சுதா என்றார்.

``பெண்களின் வீடியோகளும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது சரியா'' என்பது குறித்து வழக்கறிஞர் சுதாவிடம் பேசினோம். ``ஒருவரின் அனுமதியின்றி எந்த ஒரு தகவலையும் மற்றவர்களுக்குப் பகிர்வது சட்டப்படி குற்றம். அது நண்பராகவே இருந்தாலும், தவறுதான். ஒரு குற்றம் நடக்கிறது என்றால், அதைப் பதிவிட சமூக வலைதளங்களில்  பகிரவேண்டிய அவசியம் என்ன? எல்லாக் குற்றத்துக்கும் சமூக வலைதளங்கள் தீர்வாகுமா? ஒரு தவறு நடக்கும்போது அதைச் சட்டப்படி அணுகவேண்டுமே தவிர, இப்படிச் செய்வது நிச்சயம் தண்டனைக்குரிய குற்றம். இந்தச் செயல்களைப் பார்க்கும்போது ஆண்களின் மனநிலை இன்னும் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழனியில் நடந்த சம்பவத்தில், நண்பராக இருக்கும் ஒருவர் வீடியோ பதிவு செய்து, பகிர்ந்துள்ளார். அந்தப் பெண் பணியில் இருந்தபோது தவறு புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். ராணுவத் தவறுகளையோ, தீவிரவாதச் செயல்களைப் பற்றிய தகவல்களையோ சமூக வலைதளத்தில் பகிர்வார்களா? எல்லா விஷயத்தையும் பொதுவெளியில் பகிர்ந்து மக்களுக்கு நேரடியாகக் கொண்டுசெல்ல நினைத்தால் சட்டமோ, நீதிமன்றங்களோ எதற்கு" என்றார், மிகத் தெளிவாக. 

பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும், விளைவு ஒன்றுதான். ஒருவரைப் பற்றி சமூக வலைதளத்தில் பகிரும்போது, அந்தச் செய்தி சம்பந்தப்பட்டவரின் அனுமதியில்லாமல் பகிரக் கூடாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். 'குழந்தையைக் காணவில்லை', 'இந்தக் குரூப் ரத்தம் வேண்டும்' என்று பகிரப்படும் தகவல்கள் பல வருடங்களுக்கு முன்பே காலாவதியான செய்தியாக இருக்கும். எனவே, ஒரு செய்தியைப் பகிர்வதற்கு முன்பு, அதன் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொண்ட பின்னரே அதைப் பகிர வேண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்