வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (05/04/2018)

கடைசி தொடர்பு:14:16 (05/04/2018)

`பா.ஜ.க-வினருக்கு பொய்சொல்வதே  வழக்கமாகிப்போச்சு!' - இளங்கோவன் கண்டனம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காவிரிப் பிரச்னையில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.    

EVKS Elangovan

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.  அப்போது, ``மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது.  உச்ச நீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் கொடுத்தும், அலட்சியப்படுத்திவிட்டது.  விரைவில் மோடி தமிழகம் வர உள்ளார். அப்போது அவருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.  பா.ஜ.க-வின் காலடியில் ஆளும் கட்சி விழுந்துகிடக்கிறது.  பல நாள்களாக தமிழ்நாட்டை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். ஏமாற்றுகிறார்கள்.  

உண்ணாவிரதம் இருந்து கபட நாடகம் ஆடுகிறார்கள்.  இனி அவர்கள் பருப்பு வேகாது.  எல்லா இடங்களிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடக்கின்றன.  அதற்குத் தீர்வு சொல்ல முடியாமல் பா.ஜ.க-வினர் தவிக்கிறார்கள்.  இந்நிலையில் தமிழிசை, காவிரிப் பிரச்னைக்கு 3 வார காலத்தில் தீர்வு காணப்படும் என்கிறார்.  பா.ஜ.க-வினருக்குப் பொய் சொல்வதே வழக்கமாகிப் போச்சு.  பெரியாரைப் பற்றி ஹெச். ராஜா இழிவாகப் பேசுகிறார்.  பெரியாரின் பெருமைகளை அவரது பேரனாகிய நான் சொன்னால் நன்றாக இருக்காது.  இப்போது, பா.ஜ.க-வினரின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால், ஒரு வீட்டுக்குள்ள திருடனும், ஹெச். ராஜா, தமிழிசை மூவரும் போனால், திருடனை விட்டுவிடுவார்கள், ஹெச். ராஜாவையும் தமிழிசையையும் பிடித்து அடிப்பார்கள்.  அவர்கள் நிலைமை இப்படியாகிப் போச்சு'' என்றவரிடம், `ஜி.எஸ்.டி., சுங்கவரி போன்றவற்றை முந்தைய காங்கிரஸ் அரசுதானே கொண்டுவந்தது என்ற கேள்விக்கு, ``இதையெல்லாம் நாங்கள் கொண்டுவர மாட்டோம் என்று சொல்லித்தானே பி.ஜே.பி-யினர் ஆட்சிக்கு வந்தார்கள். அப்புறம் ஏன் காங்கிரஸ் திட்டத்தைச் செயல்படுத்துறாங்க?'' என்றார். 
   
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க