“முழுஅடைப்புப் போராட்டம் 100% வெற்றி!” - ஸ்டாலின் பெருமிதம் #WeWantCMB | cauvery management Board, tamil nadu bandh success says stalin

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (05/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (05/04/2018)

“முழுஅடைப்புப் போராட்டம் 100% வெற்றி!” - ஸ்டாலின் பெருமிதம் #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது, தமிழகத்தின் பல பகுதிகளில் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெற்று வருகின்றன. சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்திய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அண்ணா சமாதி வரை பேரணியாகச் சென்று கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின், போலீஸார் ஸ்டாலினை குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று கைது செய்தனர். அவருடன் கூட்டணிக்கட்சித் தலைவர்களையும் கைது செய்து அருகில் உள்ள ஒரு
மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அதை மதிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது. மாநில அரசும் அவர்களுக்கு அழுத்தம் தராமல் மோடி அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். இந்தப் போராட்டத்துக்கு அனைத்து அமைப்பினரும் பொதுமக்களும் தங்களின் ஆதரவை அளித்து இதை 100 சதவிகிதம் வெற்றி பெற செய்துவிட்டனர். போராட்டத்தை வெற்றிபெற செய்த அனைத்துக்கட்சித் தொண்டர்களுக்கும் அனைத்துச் சங்கத்தினருக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மேலும் இந்தப் போராட்டதுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அனைத்துக்கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் லட்சக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு செய்திகள் வருகின்றன. கைதின் காரணமாக இன்று மாலை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். முன்னதாக நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான ‘டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பேரணி’ வரும் ஏப்ரல் 7-ம் தேதி திருச்சியில் தொடங்கி கடலூரில் முடிவடைய உள்ளது. இதில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தப் பேரணியை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்று, உடனடியாக உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். சில ஊடகங்கள் திட்டமிட்டே பல இடங்களில் வன்முறைகள் நடைபெறுவதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். ஆனால், தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.