அண்ணாசாலையை முடக்கிய சி.பி.எம் கட்சியினர் கைது! #TNBandhUpdates #WeWantCMB | GR and CPM cadres demonstrating against Union, state governments, arrested

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (05/04/2018)

கடைசி தொடர்பு:17:55 (05/04/2018)

அண்ணாசாலையை முடக்கிய சி.பி.எம் கட்சியினர் கைது! #TNBandhUpdates #WeWantCMB

முழு அடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள் சார்பில் இன்று பொதுவேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பு நடந்துவருகிறது. சென்னை, சைதாப்பேட்டையில் இன்று முற்பகல் சி.பி.எம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இன்று காலையில் சைதாப்பேட்டை, அண்ணாசாலை பனகல் மாளிகை முன்பாக சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டனர். அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பீமாராவ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வனஜகுமாரி, சி.ஐ.டி.யு மாநிலத் துணைத் தலைவர் லதா, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நம்புராஜன், அச்சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் சாந்தி, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் செல்வசிங், ராஜசேகரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையை மறித்தனர். 

முழு அடைப்பு

காலை 10.20 மணிக்குத் தொடங்கிய மறியல் போராட்டம், முக்கால் மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அவகாசம் கேட்டு இழுத்தடிக்கும் மத்திய அரசையும் முறைப்படி அதற்கு நெருக்கடி தர வேண்டிய மாநில அரசையும் கண்டித்து போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மறியலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்த போலீஸார், அவர்கள் அனைவரையும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கொண்டுபோய் வைத்தனர்.