வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (05/04/2018)

கடைசி தொடர்பு:15:56 (05/04/2018)

திண்டுக்கல்லில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு

திண்டுக்கல்லில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுப்பாடு 

எந்த ஊருக்கு பெண் கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பெண் கொடுக்கக் கூடாது என ஒரு பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதற்குக் காரணம், திண்டுக்கல் மலைமறைவு பிரதேசம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நகரம் என்பதால்தான். அரசாங்கம் எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு இன்று வரை தொடர்கதையாகவே இருக்கிறது. அதற்கேற்ப இயற்கையும் ஒத்துழைக்காததால், தற்போது தாகத்தில் தவிக்கிறது திண்டுக்கல். கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே இந்தத் திண்டாட்டம் என்றால் கோடையில் என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் பொதுமக்கள். 

இந்த ஆண்டு ஐனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெறும் 10.01 மி.மீ மழையும், மார்ச் மாதத்தில் 25.35 மி.மீ மழையும் பெய்துள்ளது. இது வழக்கமாகக் கிடைக்கும் சராசரி மழை அளவைவிட 60 சதவிகிதம் குறைவு. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டுவிட்டன. திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது. இங்கிருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் தனிநபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர்  தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது 75 லிட்டர் மட்டுமே கொடுக்கப்படுகிறது. 10 நாள்களுக்கு ஒருமுறைதான் மாநகராட்சித் தண்ணீர் வீடுகளுக்கு கிடைக்கிறது. இதனால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு 

தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி தண்ணீர் வியாபாரம் திண்டுக்கல்லில் சூடுபிடித்துள்ளது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நான்கு  நபர்கள் உள்ள ஒரு குடும்பம், தினமும் 10 குடம் தண்ணீர் விலைகொடுத்து வாங்க வேண்டியுள்ளது. இதனால், தண்ணீருக்காக மாதம் 3,000 வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் குடிநீர் கேட்டு தினமும் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறார்கள். உச்சபச்ச கொடுமையாகக் குடிநீர் கேட்டு மனுகொடுக்க வரும் மக்கள் தாகம் தீர்த்துக்கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் குழாய்க்குப் போனால், அங்கும் தண்ணீர் இருப்பதில்லை. 

மாவட்டத்தில் உள்ள 1,030 குளங்கள், 95 கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. பல நீர்நிலைகளில் மண், மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. இதைத் தடுத்தால்தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். நீர்நிலைகளை பாதுகாப்பதுடன், தண்ணீரை அதிக விலைக்கு விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க