வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (05/04/2018)

கடைசி தொடர்பு:15:03 (05/04/2018)

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகத் துணைவேந்தரா? - ஆளுநரைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரபரப்பை கிளப்பி வருகிறது.

கடந்த வாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வுசெய்வதற்கான நேர்முகத்தேர்வு, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடந்தது. தேர்வுக்குழு நேர்முகத்தேர்வு நடத்தி, மூன்று பேராசிரியர்களைத் தேர்வுசெய்து ஆளுநரின் பார்வைக்கு அனுப்பியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம்

இந்த மூன்று பேராசிரியர்களில், பல்கலைக்கழக மானியக்குழுவின் துணைத்தலைவராகப் பதவி வகித்த சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தேவராஜ், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பா மற்றும் சென்னை ஐஐடி-யின் கணிதத்துறை பேராசிரியர் பொன்னுசாமி. 

இவர்கள் மூன்று பேரும், இன்று ஆளுநரைச் சந்தித்துப் பேச உள்ளனர். அதன்பின்பே, துணைவேந்தர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கிடையில், ஏற்கெனவே பேராசிரியர் சூரப்பாவை ஆளுநர் துணைவேந்தராகத் தேர்ந்தெடுத்துவிட்டதாகச் செய்தி வெளியாகிப் பரவி வருகிறது. இதைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களே திட்டமிட்டு பரப்பிவருகின்றனர் என்கிறார்கள் கல்வியாளர்கள். 

சூரப்பா

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவை துணைவேந்தராக நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த அறிக்கையில், "கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமித்தால், நிர்வாகத்திறன்கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். கர்நாடகாவைச் சார்ந்தவரை நியமிப்பது கண்டிக்கத்தக்கது, ஏற்றுக்கொள்ள முடியாது. 

அண்ணா பல்கலைக்கழகம், ஓர் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால், அதன் தலைமைப் பதவிக்கு யாரை நியமித்தாலும் கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்தில் உள்ள 554 தனியார் பொறியியல் கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 584 பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகம்தான் ஒழுங்குபடுத்துகிறது. இதன் முழுப் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரையே சாரும். 

தமிழகத்தின் கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதாரச் சூழலை நன்கு அறிந்த ஒருவரால் மட்டும்தான் இந்தப் பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரால் இதைச் சரியாகச் செய்வது சாத்தியமற்றது ஆகும். இதற்கெல்லாம் மேலாக தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரால்தான் தமிழகத்தின் அடையாளமான அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத் தரத்துக்கு முன்னேற்றுவதற்காக உணர்வுபூர்வமாகப் பாடுபட முடியும். 

மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கல்வி மற்றும் நிர்வாகத் திறமையில் என்னதான் சிறந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு இது நமது கல்வி நிறுவனம்; இதை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு இருக்காது. அதனால்தான் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தமிழர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க பா.ம.க வலியுறுத்துகிறது. 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 170 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் ஒரு தமிழருக்குக்கூட துணைவேந்தராக நியமிக்கப்படத் தகுதியில்லை என்பதை ஏற்க முடியாது. எனவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும். துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களாகத் தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பதவிக்கு, சென்னை ஐஐடி-யின் கணிதத்துறை பேராசிரியர் பொன்னுசாமியும், பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான தேவராஜுக்கும்தான் கடுமையான போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. இன்று, புதிய துணைவேந்தர் யார் என்ற முடிவுக்கு விடை கிடைத்துவிடும்.