Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுநர், மெர்சல், மீம்ஸ், காங்கிரஸ், வைகோ, தி.மு.க..! - இவற்றுக்கெல்லாம் சீமானின் பதில் என்ன?

சீமான்

காவிரி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தஞ்சையில் இன்று வருமான வரித்துறை அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டு போராடியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. `மெர்சல் படத்துக்காக பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தியபோது, அதைக் கண்டித்து ட்வீட் போட்டார் ராகுல். காவிரிக்காக அவர் எதையும் பேசவில்லை. இவர்கள் யாரையும் நம்பிப் பயனில்லை' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி, காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தகித்துக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான போராட்டம் குறித்து நேற்று முதலமைச்சரை அழைத்து விளக்கம் கேட்டிருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். `எங்களுடைய பதிலில் ஆளுநர் திருப்தியடைந்துவிட்டார்' என மீடியாக்களுக்குப் பதில் கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று காலை முதலே சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் எனக் காவிரி விவகாரம் அனல் பரப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி மீது வைகோ வைத்த விமர்சனங்களும் அதற்கு நாம் தமிழர் கட்சியின் முன்வைத்த எதிர்வினைகளும் அரசியல்ரீதியாக அதிர வைத்துக்கொண்டிருக்கின்றன. 

காவிரி விவகாரம், வைகோவுடனான தகராறு ஆகியவை குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். 

ஸ்டாலின்``எங்கள் கட்சித் தொண்டர்களைக் கைது செய்வதில் காவல்துறை காட்டும் கொடுமையைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இந்த அரசுதான் உரிமையைப் போராடிப் பெற்றுக் கொடுக்கவில்லை. போராடுவதற்காவது எங்களை அனுமதிக்க வேண்டும் அல்லவா? எங்கள் கட்சித் தொண்டர்களின் கழுத்தில் கையை வைத்துத் தள்ளிக்கொண்டு போகின்றனர் காவல்துறை அதிகாரிகள். நாங்கள் கொள்ளையடித்தோமா? கொலை செய்தோமா? கலவரத்துக்கு வித்திட்டோமா... நீங்கள் உண்மையிலேயே உண்ணாவிரதம் இருந்தீர்கள் என்றால், மெரினா கடற்கரையில் போராடுவதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்..உயிரைவிட பொழுதுபோக்கு முக்கியமானதா... நீங்களும் போராட மாட்டீர்கள்...எங்களையும் போராட அனுமதிக்க மாட்டீர்கள் என்றால் இது யாருக்கான அரசாங்கமாக இருக்கிறது...ஆளும்கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிக்கும் இது பொருந்தும். பா.ஜ.க அரசு நம்மை வஞ்சிக்கிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துத்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. அதற்கு முன்னதாக ஒன்பதரை ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க என்ன செய்தது..இதே பிரச்னை அப்போதும் இருந்தது. 

காவிரி பிரச்னை என்பது இன்று நேற்றல்ல...ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. இன்றைக்குத் தெருவில் இறங்கி ஸ்டாலின் போராடுகிறார்; உட்காருகிறார். மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது தீர்வைக் கண்டிருந்தால் இன்றைக்குத் தெருவில் உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமே ஸ்டாலினுக்கு வந்திருக்காது. மத்தியில் 17 ஆண்டுகாலம் கூட்டணி அரசில் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இந்தியாவிலேயே தொடர்ச்சியாக இவ்வளவு ஆண்டுகள் பதவியில் இருந்த ஒரே கட்சி தி.மு.க-தான். அவர்கள் எந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்... இவர்கள் செய்த செயலால்தான் காவிரியில் நமக்கான உரிமையாக இருந்த 400 டி.எம்.சி-யிலிருந்து குறைந்து குறைந்து 177.2 டி.எம்.சி தண்ணீர் அளவுக்கு வந்துவிட்டது. ஸ்டெர்லைட் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டியது ஜெயலலிதா. அதைத் திறந்து வைத்தது தி.மு.க. இதற்கு சட்ட ஆலோசகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நளினி சிதம்பரம். வேதாந்தா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவராக சிதம்பரம் இருக்கிறார். இதையெல்லாம் எங்கே போய்ச் சொல்வது? இவ்வளவு பிரச்னைகளை மக்களுக்கு அளித்ததற்காகக் கவலைப்பட வேண்டிய கட்சிகள் இவை. என்னுடைய போராட்டத்தில் கொலை செய்தவர்களும் அமர்ந்து அழுவது எந்த வகையில் நியாயம் என்றுதான் கேட்கிறேன்.  

எடப்பாடி பழனிசாமிஇதே காங்கிரஸ் கட்சி அடுத்து ஆட்சிக்கு வந்தால், நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் எனச் சொல்வார்களா? கடந்த காலத்தில் ஏன் அமைக்கவில்லை என்பதற்கும் அவர்கள் காரணம் சொல்லட்டும். இப்போது திடீர் எனப் போராட்டத்தில் கலந்துகொள்வது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.. கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவற்றை, தற்போது பா.ஜ.க செய்து வருகிறது. எதிர்காலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். காவிரி விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையின் நிலைப்பாடு என்ன? சித்தராமையாவின் கருத்துதான் சோனியா காந்தியின் கருத்து. மெர்சல் படத்துக்காக பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தியபோது, அதைக் கண்டித்து ட்வீட் போட்டார் ராகுல். காவிரிக்காக அவர் எதையும் பேசவில்லை. இவர்கள் யாரையும் நம்பிப் பயனில்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரியைப் பிற மாநிலங்களுக்குத் தர முடியாது எனக் கடுமை காட்டினால் மற்றவர்கள் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். இதை முன்னெடுக்க வேண்டியது மாநில அரசுதான்.

எங்கள் உயிரை வதைக்கும் அணுஉலையிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் மின்சாரம் கொடுக்கிறார்கள். இனி மின்சாரம் தர முடியாது என அறிவித்தால், அப்போது நம்மைப் பற்றி புரிந்து கொள்வார்கள். இதற்குப் பதில் சொல்லாமல் ஒருபுறம் உண்ணாவிரதம், மறுபுறம் வகை வகையான உணவுகள் எனப் போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறார்கள். ஒரு நாட்டின் பிரதமர், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, 'காவிரியால் கர்நாடகாவில் பிரச்னை வரும்' என மனுத்தாக்கல் செய்கிறார். அப்படியானால், தமிழ்நாட்டில் பிரச்னை வராது என அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். நம்மை அவர்கள் அறவே மதிக்கவில்லை. இந்த அரசே மோடியுடையதுதான். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு என்ன தீர்வு எனப் பேசாமல், ஆளுநரை சந்திக்கச் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. வைகோஆளுநருக்கு முதலமைச்சர் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? ஆளுநர்தான் தெருத் தெருவாகச் சென்று ஆய்வு நடத்துகிறாரே.. அவருக்குக் கள நிலவரம் தெரியாதா..'போராட்டத்தை ஒடுக்குங்கள்' என்பதைத் தவிர வேறு என்ன சொல்லியிருப்பார் ஆளுநர்?" எனக் கொந்தளித்தவரிடம், 

வைகோவுடனான மோதல் குறித்துக் கேட்டோம். ``அந்த மோதல் பற்றிப் பேசவே விரும்பவில்லை. வைகோவை எதிர்ப்பதற்காக நான் கட்சியைத் தொடங்கிவில்லை. நான் எதிர்வினையாற்றினால், அவர்கள் யாருமே தாங்க மாட்டார்கள். எங்கள் தம்பிகளை அமைதியாக இருக்கச் சொல்லியிருக்கிறேன். மீம்ஸ் போட்டார்கள் எனக் கொதிக்கிறார் வைகோ. எனக்கு எதிராக சம்பளத்துக்கு ஆள் வைத்து மீம்ஸ் போட்டார்கள். எந்தெந்த கட்சி அப்படிச் செய்தது என எனக்குத் தெரியும். இதையெல்லாம் பொருட்படுத்துகிறவன் ஒரு போராட்டக்காரனாக களத்தில் நிற்க முடியாது. கல்லடிக்கே கலங்காதவன் நான், சொல்லடிக்கா கலங்கப் போகிறேன்...அவர் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். `லட்சம் பேர் இருக்கிறார்கள்' என்கிறார். அவர் நடத்திய ஊர்வலத்தில் ஐம்பது பேர்கூட உடன் நடக்கவில்லை. அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். எனக்கு நண்பனாக இருப்பதைவிட எதிரியாக இருப்பதற்குத் தகுதி வேண்டும். அவரா என்னுடைய எதிரி...கடந்து போகட்டும் என நினைக்கிறேன். தொடர்ச்சியாக மிரட்டிக்கொண்டே இருந்தால் என்னுடைய ஆள் என்ன பண்ணுவான்னு எனக்கே தெரியாது. ரொம்பநாளாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடன் இருப்பவர்களுக்கு எது உண்மை...எது பொய் எனத் தெரியும்" என்றார் நிதானமாக. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement