வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/04/2018)

கடைசி தொடர்பு:16:35 (02/07/2018)

எடப்பாடி அரசைக் கலைப்பதும் கலைக்காததும் மோடி பிரச்னை!" - கலகலத்த முத்தரசன்

`தமிழ்நாட்டை செத்த பிணமாகக் கருதுகிறார் பிரதமர் மோடி’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
 

முத்தரசன்

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகவும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டத்தில் பங்குபெறுவதற்காகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டை வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "இன்றைய சூழலில் தமிழ்நாடு கொந்தளிப்பில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், மாணவர்கள், பொதுமக்கள், அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

இன்றைக்கு தமிழகம், புதுச்சேரியில் நடந்துவரும் கடையடைப்புப் போராட்டம் பெரிய வெற்றி அடைந்துள்ளது. நாங்கள் நடத்திவரும் இந்த மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்துக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். போராட்டம் அறவழியில் நடப்பது, தமிழக மக்களின் உணர்வை மத்திய அரசுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு, பல லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை அழிவிலிருந்து மீட்பதற்கு, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் அவசியம். கர்நாடகா தேர்தல் வெற்றியை மனதில்கொண்டு ஆளும் பா.ஜ.க அரசு ஒரு மாநிலத்தின் உரிமையை நசுக்குவது அறம் சார்ந்த செயல் அல்ல. மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் இந்த அறவழிப் போராட்டத்துக்கு மதிப்புக் கொடுத்து மிக விரைவில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, 'காவிரி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று கூறி இருப்பது மகிழ்ச்சிதான். ஆனால்,காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த அத்தனை உத்தரவுகளையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்பதும், அதை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மத்திய அரசும் அதற்கான அழுத்தங்களைக் கொடுக்காமல் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் வரலாறு. இதை இப்போதைய தலைமை நீதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும். ராணுவத்தில் ஒரு வீரர் இறந்துவிட்டால் அந்த வீரரின் உடலை பிணமாகக் கருதி, அப்படியே போட்டுவிட்டு சக வீரர்கள் ஓடுவார்கள். அப்படித்தான் மோடியும் தமிழ்நாட்டை செத்த பிணமாகக் கருதி அப்படியே போட்டுவிட்டு கர்நாடகாவை நோக்கி ஓடுகிறார்.

இந்தக் காவிரி விவகாரத்தை வைத்து கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கருதுகிறார். அதேசமயம், எத்தனை குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று மோடிக்குப் புரிந்துவிட்டது. எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்தக் கருத்துடன் களத்தில் நின்று போராடும் சூழலைத் தவிர்க்கவே, அ.தி.மு.க தனியாக உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறது. எடப்பாடி அரசைக் கலைப்பதும் கலைக்காததும் மோடியின் பிரச்னை. எதிர்க்கட்சி எம்.பி-க்களை காவிரி நதிநீருக்காக ராஜினாமா செய்யச் சொல்லும் சகோதரி தமிழிசை, தமிழ்நாட்டு ஜீவாதாரப் பிரச்னைக்காக ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க நிர்வாகிகளும் ராஜினாமா செய்கிறோம் என்று மோடியைச் சந்தித்து கூறுவாரா. அவர் அப்படிச் செய்தால், எதிர்க்கட்சி மாநிலங்களவை எம்.பி-க்களும் அப்படிச் செய்வார்கள். கமல் கூறுகிற கருத்துகளுக்கெல்லாம் நான் பதில் கூற விரும்பவில்லை" என்றார்.