மணல் மாஃபியாக்களைக் கண்டுகொள்ளாத அரசு! - டெல்டா மாவட்டங்களில் கொழிக்கும் மணல் திருட்டு

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள்மீது வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால், மணல் மாஃபியாக்களைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணல்

உயர் நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இரண்டு யூனிட் மணல், கிடுகிடுவென விலை உயர்ந்து 24,000-த்தை தாண்டியது. மணல் தட்டுப்பாட்டினாலும் விலையேற்றத்தினாலும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடங்கின. இத்தொழிலில் ஈடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

இவற்றை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. மணல் குவாரிகளுக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆறுகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் அமைக்க சுற்றுச்சூழல் துறையினரின் அனுமதியைப் பெற்றது. ஆனாலும், டெண்டர் விடுதல் போன்ற ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் புதிய குவாரிகள் திறக்க காலதாமதாகும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கும் மாட்டு வண்டிகளைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில் வருவாய்த் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களில் மட்டும் தஞ்சை மாவட்டம் திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், ஆளுங்கட்சியினரின் மறைமுக ஒப்புதலோடு பெரிய அளவில் மணல் கொள்ளைகளில் ஈடுபடும் மணல் மாஃபியாக்களின் லாரிகளை வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள் சிறய அளவிலான மணல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!