வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/04/2018)

கடைசி தொடர்பு:17:40 (05/04/2018)

`பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கலாமே?’ - சுப.உதயகுமார் கேள்வி #WeWantCMB

தமிழக முதல்வருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலே இருந்தால் டில்லி சென்று பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கலாமே என சுப. உதயகுமார் தெரிவித்தார்.

மிழக முதல்வருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இருந்தால் டெல்லி சென்று பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கலாமே என சுப.உதயகுமார் யோசனை தெரிவித்துள்ளார்.

சுப.உதயகுமார்

பச்சைத் தமிழகம் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பச்சைத் தமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருந்து வருகிறது. கன்னட மக்களின் கண்களில் வெண்ணெயையும் தமிழக மக்கள் கண்களில் சுண்ணாம்பும் வைத்து வருகிறது மத்திய அரசு. உலக வங்கியின் ஆதரவை பெற்று தமிழக விவசாயிகளுக்கு கொடுமை செய்து வருகிறது மத்திய அரசு. நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகளுக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காவிரிக்கு மட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்கி வருகிறது.

கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் நாடகமாடி வருகின்றனர். மோடி இவர்களிடம், `நான் அடிப்பதுபோல் அடிப்பேன், நீ அழுவதுபோல் நடி’ என வேடிக்கை செய்து வருகிறார். தமிழக முதல்வருக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இருந்தால், டெல்லி சென்று பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கலாமே. இவர்களின் நடிப்பு கூடிய சீக்கிரம் பொதுமக்களுக்கு தெரியவந்து விரட்டப்படுவார்கள். 42 நாள்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் 41வது நாளில், தீர்ப்பில் உள்ள `ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன எனக் கோர்ட்டில் விளக்கம் கேட்கிறார்கள்.

கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், கெயில், ஸ்டெர்லைட், குமரி சரக்குப்பெட்டகத் துறைமுகம் போன்ற இயற்கையை அழிக்கும், மக்கள் உடல்நலன்களைக் கெடுக்கும் மாபாதக அழிவுத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என்றால், மாநிலங்களுக்கிடையே பாரபட்சம் காட்டி தேர்தல் வெற்றிக்காக மக்களை பிரித்தாண்டு, நாட்டு ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் பேர்வழிகளின் பெயர் என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.