வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/04/2018)

`தமிழகத்தைப் பாலைவனமாக்கத் திட்டமிடுகிறார்கள்!’ - ரயிலை மறித்து தி.க ஆவேசம் 

`தமிழகத்தைப் பாலைவனமாக்கத் திட்டமிடுகிறார்கள்!’ - ரயிலை மறித்து தி.க ஆவேசம் 

''தமிழ்நாடு பாலைவனமாவதற்கு எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. எங்களைக் கால்பதிக்க இடம் கொடுங்கள்; உங்களுக்குக் காவிரி நீரைத் தருகிறோம் என்று தமிழ்நாட்டை நோக்கி பி.ஜே.பி ஆட்சி சொல்லாமல் சொல்லிக் கொண்டுள்ளது'' என்று திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரயில் மறியல்

திராவிடர் கழகம், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் எழும்பூர் ரயில் மறியல் போராட்டத்தில் திராவிடர் கழகத்தினர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் உள்ளிட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழக நிர்வாகிகள், எழும்பூர் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முழக்கங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் சென்று சென்னை தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் செல்லும் ரயிலை மறித்து, மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து முழக்கமிட்டபடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரயில் மறியல்

போராட்டம் குறித்து பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், ''காவிரி நதிநீர் உரிமை மீட்புக்காகத் தமிழ்நாடு தழுவிய அளவில் நடத்தப்படவிருக்கும் முழு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிக் காட்ட வேண்டும். பரம எதிரிகளாக இருந்து வரும் இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான சிந்து நதிப் பிரச்னை, இந்தியாவுக்கும் - வங்கதேசத்துக்குமிடையிலான நதிநீர்ப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்துக்கொள்ள முடிகிறது. இந்தியத் தேசியம் பேசும் இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் அதிலும் குறிப்பாக, காவிரி நீர்ப் பிரச்னை மட்டும் தீர்வு காண முடியாததாக இருக்கிறது என்றால், இதன் பொருள் என்ன. சட்டம், ஒப்பந்தம், நியாயம், நீதி இவை எல்லாம் அரசியல் சுயலாபம் என்பதற்கு முன்னர் காணாமல் போய்விடுகின்றன. காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது என்பதற்காக மட்டும், தானடித்த மூப்பாக கர்நாடகம் நடந்துகொள்ள முடியுமா? 

ஆனால், நடப்பது என்ன. தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்துவது மட்டும்தான் கர்நாடகம் பின்பற்றிவரும் அழும்பும் - அக்கிரமமும் ஆகும். நடுவர் மன்றம் சொன்னால் என்ன. ஏன் உச்ச நீதிமன்றமும்தான் கட்டளையிட்டால் என்ன. அவற்றையெல்லாம் பொருட்படுத்தப் போவதில்லை என்பதில் கர்நாடகமும் மத்திய அரசும் உறுதியாகவே இருக்கின்றன. இதன்மூலம் சட்ட ஆட்சி என்பதே இந்தியாவில் நொறுங்கிப் போய்விட்டதா இல்லையா. மாநிலங்களின் ஒருங்கிணைப்புதான் இந்தியா என்பதை இந்திய தேசியமும் மத்திய ஆட்சியும் நீதிமன்றங்களும் கேள்விக்குறியாக்கிவிட்டன. 

தமிழ்நாடு பாலைவனமாவதற்கு எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. எங்களைக் கால் பதிக்க இடம் கொடுங்கள் - உங்களுக்குக் காவிரி நீரைத் தருகிறோம் என்று தமிழ்நாட்டை நோக்கி பி.ஜே.பி ஆட்சி சொல்லாமல் சொல்லிக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றும் மேல்முறையீடுகள் இதில் கிடையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஸ்கீம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு வார்த்தை விளையாட்டில் மத்திய பி.ஜே.பி அரசும் கர்நாடக மாநில அரசும் ஈடுபடுவது சிறுபிள்ளைத்தனம் அல்லவா'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க