வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (05/04/2018)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போர்டுகளுக்கு தார் பூசிய வழக்கறிஞர்கள்!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர். 

ஸ்டெர்லைட் ஆலை போர்டுகள்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 50 நாள்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியாபுரம், மீளவிட்டான் ஆகிய கிராம மக்களும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். பல தரப்பினர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கமும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது. 

dhar paint coated on sterlite boards

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் இன்று, தூத்துக்குடி மாநகரில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் போர்டுகளில் தார் பூசினர். இதுகுறித்து வழக்கறிஞர் அதிசயக் குமாரிடம் பேசினோம், “தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்குப்  பேராபத்தை தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது. இதை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்தநிலையில், நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.  

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் இடைக்கால நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, கடந்த 4-ம் தேதி புதன்கிழமை முதல் வரும் 7-ம் தேதி சனிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மீதும், அதைச் சார்ந்த போராட்டக் காரர்கள்மீதும் போடப்படும் வழக்குகளில், வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்களை நியமித்து அவர்களுக்காக இலவசமாக நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடவும் முடிவு செய்துள்ளோம்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்கள், முக்கிய சந்திப்புகள், கடற்கரைப் பகுதி, ரயில் நிலையம் ஆகியவற்றில் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையிடம் நன்கொடை பெறப்பட்டு சில பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை போர்டுகளில் ஸ்டெர்லைட் என்ற சொல்லை தார் பூசி மறைத்து எங்கள்து எதிர்ப்பைக் காட்டி வருகிறோம். கிராமங்களிலும் வைக்கப்பட்டுள்ள போர்டுகளிலும் இதேபோல தார் பூசி மறைத்து வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை போர்டு எங்கு கண்ணில் பட்டாலும் வழக்கறிஞர்கள் தார் பூசுவார்கள். இந்த ஆலை மூடப்படும் வரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க