வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (05/04/2018)

கடைசி தொடர்பு:17:04 (05/04/2018)

`தனக்குச் சொந்தமான கடையை மட்டும் அடைக்கவில்லை ! - ம.தி.மு.க நிர்வாகியால் தொண்டர்கள் அதிருப்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மதிமுக நிர்வாகி மட்டும் கடையை அடைக்காமல் வியாபாரம் செய்து கொண்டிருந்தது போராட்டகாரர்களை வேதனையடைய வைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு, பஸ், ரயில் மறியல் போராட்டங்கள் எனத் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் நிலையில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் தனக்குச் சொந்தமான டீ கடையை மூடாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்தது போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை வேதனையடைய வைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனே அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திமுக, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இன்று தஞ்சாவூரில் கடையடைப்பு, ரயில் மற்றும் பஸ் மறியல், மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகை எனப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக மாவட்டச் செயலாளரான உதயகுமார் தனக்குச் சொந்தமான ஆவின் டீக்கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வைகோவின் கட்சியிலிருந்து கொண்டு காவிரிக்காக நடைபெறும் இந்த உயிர் போராட்டத்தில் கூட தனது கடையை அடைக்காமல் வியாபாரம் செய்கிறாறே எனப் போராட்டத்துக்கு வந்தவர்கள் வருத்தப்பட்டு விமர்சனம் செய்தனர்.

அவர்களிடம் பேசினோம்,... `அனைத்துக் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் உதயகுமாரும் கலந்துகொண்டார். அவருக்குச் சொந்தமான ஆவின் டீ கடை ரயில்வே ஸ்டேஷன் முகப்பிலேயே  உள்ளது. அந்தக் கடையைப் பெயரளவுக்கு மட்டுமே மூடிவிட்டு ஒரு பக்கத்தில் மட்டும் ஆள் உள்ளே சென்று வரும் அளவுக்கு வழி வைத்து போர்வையால் மறைத்தபடி வியாபாரம் நடத்தினார். வடை உள்ளிட்ட பலகாரம், வாட்டர் பாட்டில், டீ, லெஸி என அனைத்தையும் அந்தக் கடையில் வேலை பார்ப்பவர்கள் வழக்கம் போல் வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். அதனால், அந்தக் கடையின் முன் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

 

ரயில் மறியல் போராட்டத்தை முடித்து விட்டு வந்த உதயகுமார் கடையிலேயே உட்கார்ந்தார். காலை 11 மணிக்கு மேல் கடையை மறைத்து போர்த்தபட்டிருந்த போர்வையை முழுவதுமாக எடுத்து விட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

ம.தி.மு.கவின் மாவட்டச் செயலாளராக இருந்துகொண்டு ஒரு நாள் போராட்டத்துக்குக் கூட கடையை அடைக்காமல் இவரே திறந்து வைத்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். மேலும், வைகோ நியூட்டிரினோ திட்டத்தை எதிர்த்து தேனியில் தொடங்கிய நடைபயணத்தில் வைகோ முன்பே சிவகாசியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீ குளித்து உயிரிழந்தார். இது போன்ற செயலை எந்த மதிமுக தொண்டரும் செய்யக் கூடாது என வைகோ மனமுருகி கேட்டுக் கொண்டார். அந்த அளவுக்கு மக்கள் பிரச்னைக்கான போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொள்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.உதயகுமார் போன்ற சிலரின் செயல்பாடுகளால் வைகோ -வுக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு அவர் நடத்தும் போராட்டத்துக்கும் அர்த்தமில்லாமல் போகிறது.

மதிமுக பிரமுகர்

 மேலும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்காக உணர்வோடு எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து போராடி வருகிறார் வைகோ. அவர் கட்சியில் இருக்கும் மாவட்டச் செயலாளர் இப்படி நடந்துகொள்கிறாரே என நொந்து கொண்டனர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க