வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (05/04/2018)

கடைசி தொடர்பு:16:36 (05/04/2018)

“துப்பாக்கியால் சுட்ருவேன்!” - தி.மு.க எம்.எல்.ஏ-வை மிரட்டிய புதுச்சேரி எஸ்.பி

துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என புதுச்சேரி தி.மு.க. எம்.எல்.ஏ சிவாவை காவல்துறை எஸ்.பி மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் - புதுச்சேரியில் தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், அதனுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சென்னையில் நடைபெற்றப் போராட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதேபோல புதுச்சேரியில் புதிய பேருந்து நிலயத்தின் முன் தி.மு.க தலைமையில் இன்று காலை கூடிய அனைத்துக்கட்சிகளும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அண்ணா சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதையடுத்து மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி தி.மு.க எம்.எல்.ஏ-வின் காரைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்போது போலீஸுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தையடுத்து, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் போராட்டத்தில் இருந்த தி.மு.க எம்.எல்.ஏ சிவாவை போலீஸ் எஸ்.பி வெங்கடசாமி, “போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்ருவேன்” என்று மிரட்டியதாக வெளியான தகவலால் அங்கு பதற்றம் நிலவியது. அதையடுத்து போலீஸைக் கண்டித்து அனைத்துக்கட்சியினரும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட எம்.எல்.ஏ சிவாவின் காரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர்.

திமுக

இதுகுறித்து புதுச்சேரி தெற்கு மாவட்ட தி.மு.க அமைப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான சிவாவிடம் பேசினோம். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாங்கள் போராடி வருகிறோம். அதன் ஒரு கட்டமாக மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது அங்கு வந்த போலீஸ் எஸ்.பி வெங்கடசாமி எங்களைக் கலைந்து செல்லுமாறு கூறியதோடு, எனது காரையும் பறிமுதல் செய்தார். சட்டப்படி தாராளமாக எங்கள்மீது வழக்குப் போடுங்கள். ஆனால், போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறினேன். அதற்கு கலைந்து செல்லவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார். இந்த விவகாரத்தில் எங்கள் கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்” என்றார்.

புதுச்சேரி

தி.மு.க எம்.எல்.ஏ-வின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க புதுச்சேரி, கிழக்குப் பிரிவு காவல்துறை எஸ்.பி வெங்கடசாமியைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், பலமுறை தொடர்புகொண்டும் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் உரிய விளக்கத்தைக் கொடுத்தால் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க