”வந்தவாசியில் ஆர்.எஸ்.எஸ்.,; நாகையில் போலீஸ் தாக்குதல்!” - சி.பி.எம். கண்டனம் #TNBandhUpdates

”வந்தவாசியில் ஆர்.எஸ்.எஸ்.,; நாகையில் போலீஸ் தாக்குதல்!” - சி.பி.எம். கண்டனம் #TNBandhUpdates

சிபிம் தலைவர் மீது தாக்குதல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சி.பி.எம். கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அப்போது அக்கட்சியினர் மீது திடீரென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில், யாசர் அராபத் என்ற ஊழியர் கை முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் இந்த அராஜக வன்முறையைக் கண்டிப்பதாகவும் சி.பி.எம். கட்சி சாடியுள்ளது.

இது குறித்து சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாவட்டk காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அடாவடித்தனமாக செயல்பட்டு போராட்டக்காரர்களை கீழே தள்ளியுள்ளார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கீழே விழுந்து காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல காவல்துறையினர் பல இடங்களில் அத்துமீறி நடந்துள்ளனர். இந்த அராஜக நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். 

மேலும், “ அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து விடுத்த அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் மக்கள் பேராதாரவுடன் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இம்மறியல் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான அரசியல் கட்சிகளின் ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், மாதர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சகல பகுதி மக்களும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதிலும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திலும், மறியல் போராட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று கைதாகியுள்ளனர். பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்துள்ளனர். இப்போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் போராட்டமாக நீடிக்கும். அனைத்துப்பகுதி பொதுமக்களும் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டும்” என்றும் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!