காவிரி ஆர்ப்பாட்டம்; கல்யாணம்; பெயர்சூட்டல்! - அசரவைத்த ஸ்டாலின் #TNBandhUpdates #WeWantCMB | Stalin's protest becomes celebration for these couples

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (05/04/2018)

கடைசி தொடர்பு:17:31 (05/04/2018)

காவிரி ஆர்ப்பாட்டம்; கல்யாணம்; பெயர்சூட்டல்! - அசரவைத்த ஸ்டாலின் #TNBandhUpdates #WeWantCMB

முழு அடைப்பு

போராட்டத்தில் கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருக்கு அங்கேயே திருமணம் நடத்தி வைத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ரயில் மறியல், கடை அடைப்பு, பேருந்துகள்மீது கல்வீச்சு எனp போராட்டக் களமாக மாறியுள்ளது தமிழகம். சென்னை அண்ணாசாலையில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர், சாலையில் அமர்ந்து கறுப்புக்கொடி பிடித்து போராட்டம் நடத்தினர். சாலை மறியலைத் தொடர்ந்து, தற்போது அண்ணா சமாதி நோக்கி பேரணியாகச் சென்று, உழைப்பாளர்கள் சிலைக்கு அருகே சாலையில் அமர்ந்து தொடர் கோஷங்களை எழுப்பினர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாகச் செல்ல, அண்ணாசாலை  ஸ்தம்பித்தது. இதையடுத்து மெரினாவில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்றனர். 

ஸ்டாலின்
 

கைதுசெய்யப்பட்ட ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டக் களைப்பில் இருந்த தலைவர்களைச் சந்திக்க சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் வந்துவிட்டனர். பச்சிளம் குழந்தையுடன் வந்த ஒரு பெண், ஸ்டாலினிடம் குழந்தையைக் கொடுத்து வாழ்த்தச் சொன்னார். குழந்தைக்கு ஸ்டாலின் பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு அந்த மண்டபத்திலேயே திருமணம் நடந்தது. 

ஸ்டாலின்

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதி விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இன்று திருமாவளவன் தலைமையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமாவளவன் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டதால் அந்தத் திருமணத்தை தலைமை தாங்கி நடத்த முடியாமல் போனதாம். இந்நிலையில் புரசைவாக்கம் திருமண மண்டபத்துக்கு வந்த பாரதிதாசன் - ஸ்ரீமதி இருவருக்கும் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தம்பதியரை திருமாவளவன் வாழ்த்தினார். 

ஸ்டாலின்
 

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close