வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (05/04/2018)

கடைசி தொடர்பு:17:18 (05/04/2018)

கொலை வழக்காக மாறிய தற்கொலை! - 11-வது மாடியிலிருந்து இளம்பெண் விழுந்த பின்னணி

கொலை

சென்னையில் 11வது மாடியிலிருந்து விழுந்த இளம்பெண்ணின் மரணம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். 

சென்னை கொரட்டூர், கெனால் சாலையில் 19 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 11வது மாடியில் சுகுணா என்பவர், குடும்பத்துடன் குடியிருந்துவருகிறார். இவரது மகள் ஜெயசுதா. இவருக்கும், சுகுணாவின் தம்பி ராஜ்கண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கொடுங்கையூரில் குடும்பம் நடத்தினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜெயசுதா, தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால், ராஜ்கண்ணு, மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஜெயசுதா, கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

 இந்தநிலையில் கடந்த 3 ம் தேதி ராஜ்கண்ணு, கொரட்டூருக்கு வந்து மனைவியைச் சமதானப்படுத்தினார். இரவு 10.30 மணியளவில் அவர்கள் இருவரும் 11வது மாடியின் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். திடீரென ராஜ்கண்ணு, அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு சுகுணா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அப்போது, ஜெயசுதா, மாடியிலிருந்து குதித்துவிட்டதாக ராஜ்கண்ணு தெரிவித்தார். இதனால், அனைவரும் கீழே ஓடிவந்தனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் ஜெயசுதா, மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஜெயசுதாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தகவல் கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்குத் தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸார், ஜெயசுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜ்கண்ணுவிடம் துருவி, துருவி போலீஸார் விசாரித்தனர். தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பிலும் விசாரணை நடந்தது. 
முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட ஜெயசுதாவின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.  பால்கனியில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரத்தில் ஜெயசுதாவை, ராஜ்கண்ணு தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்கண்ணு கைது செய்யப்பட்டார். இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றுகிறார். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அடுக்குமாடி குடியிருப்பில் 11வது மாடியிலிருந்து விழுந்து இளம்பெண் இறந்ததாகத்தான் முதலில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்தும்போதுதான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிலர் ராஜ்கண்ணு மீதுள்ள சந்தேகத்தை எங்களிடம் தெரிவித்தனர். உடனடியாக ராஜ்கண்ணுவிடம் விசாரித்தோம். ஆனால், அவர் ஜெயசுதா தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலை மட்டுமே தெரிவித்தார். இந்தச் சமயத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவல்தான் இந்த வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியது. ராஜ்கண்ணு, தள்ளிவிட்டதில்தான் ஜெயசுதா இறந்தார் என்று அந்த அதிகாரி ரகசியமாக விசாரணை அதிகாரியிடம் கூறினார். இதனால், ராஜ்கண்ணு மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்" என்றனர். 

பெயரைக் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஜெயசுதா இறந்ததும் அவரது அம்மா சுகுணாவும், அவரது உறவினர்களும் ராஜ்கண்ணு மீது எந்தக் குற்றச்சாட்டும் சொல்லவில்லை. மேலும், ராஜ்கண்ணுவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஜெயசுதாவின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, தன்னைக் கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய தகவலும் தெரியவந்தது. இதனால்தான் ஜெயசுதா தற்கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதினோம். அடுத்து, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருடன் ஜெயசுதா நட்பாகப் பழகியுள்ளார். அது, அவரது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆண் நண்பர் மூலம், சட்டக்கல்லூரியில் சேர உள்ளதாக ஜெயசுதா வீட்டில் தெரிவித்துள்ளார். அதற்கு, ஜெயசுதா குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் அவர் மரணமடைந்துள்ளார். ராஜ்கண்ணுவைச் சிறையில் அடைத்தாலும் இந்த வழக்குக்குத் தேவையான சாட்சிகள், ஆவணங்களைத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதும், சமர்பிப்பதும் பெரும் சவாலாக இருக்கும்"என்றார். 

 இந்த வழக்கில் கைதான ராஜ்கண்ணு தரப்பினர், போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தற்கொலை வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்கின்றனர். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நீதிமன்றத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர். 

 கொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பிலும் போலீஸ் நிலையத்திலும் ஜெயசுதா வழக்கு சர்ச்சைகளோடு வட்டமடிக்கிறது